யானை இல்லையேல் சிலருக்கு அரசியலே இல்லை

” ஐக்கிய தேசியக் கட்சிக்கு – ஆறுமுகன் தொண்டமானுடன் அரசியல் நெருக்கம் ஏற்பட்டுவிட்டால், தங்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வந்துவிட்டது. அதனால்தான் பதறியடித்துக்கொண்டு அறிவிப்புகளையும், அறிக்கைகளையும் விடுக்கின்றனர்.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்டத்தொழிலாளர்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் காட்டிக்கொடுத்துவிட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பா மேலும் கூறியவை வருமாறு,
”  பூனை தனது கண்களை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதாக நினைப்பதுபோல்தான் தமிழ் முற்போக்கு கூட்டணியினரும், மலையக மக்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர்.
ஆங்காங்கே தமது கட்சி அங்கத்தவர்களை தூண்டிவிட்டு. கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக என்ற போர்வையில் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கு எதிராக ஆர்பாட்டம் செய்து ஆறுமுகன் தொண்டமானை அவமானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆறுமாத காலமாக தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் அரசியல் நடத்தி வருகிறார்களே தவிர அதற்காக எவ்வித ஆக்கபூர்வமான பங்களிப்பு எதையும் செய்யவில்லை.
கடைசியாக கூட அரசியல் பங்காளிகளான தாங்களை விட்டுவிட்டு அலரிமாளிகையில் கூட்டு ஒப்பந்தத்திற்கு பிரதமர் முன்னிலையானதுதான் அமைச்சர் மணோ கணேசனுக்கு பிரச்சினையாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்திடும் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் என்பதை ஏன் மக்களிடம் மறைக்கப்பார்கின்றீர்கள்?

ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆறுமுகன் தொண்டமானுடன் அரசியல் நெறுக்கம் வந்துவிட்டால் தாங்களுடைய அரசியல் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்ற பயம் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வந்துவிட்டது.
இவர்களுக்கு யானை இல்லாமல் அரசியல் இல்லை.கூட்டு ஒப்பந்தவிடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி தவறு இழைத்துவிட்டதாக சொல்லுகிறார்கள், பிரதமர் பிழை செய்துவிட்டதாக பகிரங்கமாக அறிவித்துவிட்ட பிறகும்,  ஏன் அடுத்த முதலாம் திகதி பிரதமருடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்?
இவர்கள் பேசியவுடன் பிரதமர் அவருடைய தலைமையிலான இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தை கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலக்கிவிடப்போகிறாரா?
இவை நடக்காத பட்சத்தில் அரசாங்கத்திலிருந்து விலகி தாங்கள் உத்தமர்கள் என்பதை மலையக மக்களுக்கு நிரூபித்து காட்ட வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்பதையும், மலையக மக்களின் உண்மையான துரோகிகள் யார் என்பதையும் விரைவில் மக்கள் அறிந்துகொள்வார்கள்.” என்றும் அவர் கூறினார்.

No comments