மன்னார் புதைகுழி காபன் பரிசோதனை அறிக்கை இரு வாரத்தில்

“மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை அறிக்கை இரு வாரங்களில் வெளிவரும்.”

– இவ்வாறு அகழ்வுப் பணிக்குப் பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணி நேற்று 135 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 22ஆம் திகதி நிறுத்தப்பட்ட அகழ்வு பணி நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் இருந்து 300 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றில் 294 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மனித எலும்புக்கூடுகளில் 6 மாதிகள் தெரிவு செய்யப்பட்டு பொதிகள் செய்யப்பட்டு கடந்த 23 ஆம் திகதி கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு, மறுநாள் 24 ஆம் திகதி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அங்கு புளோரிடாவில் உள்ள ஆய்வுகூடத்துக்கு கார்பன் பரிசோதனைக்காக அவை கையளிக்கப்பட்டன. அங்கு மனித எலும்புக்கூடுகளின் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அறிக்கை இன்னும் இரு வாரங்களில் எமக்குக் கிடைக்கும். அகழ்வுப் பணிகள் தொடரும்” – என்றார்.

No comments