விகாரையும் புத்தர் சிலையுமே கூட்டமைப்பிற்குக் கிடைத்த பரிசு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக அரசுக்கு வழங்கி வரும் நிபந்தனையற்ற ஆதரவுக்குக் கிடைத்த பரிசே நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும், செம்மலைப் பிரதேசத்தில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள பெளத்த விகாரையும்.”

– இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பொதுச் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன்.

நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேப்பாப்பிலவு மக்களை நேற்று சந்தித்துப் பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதேவேளை, கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்றுமுன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அந்த மக்களின் காணிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி அளித்துள்ள வாக்குறுதி மீறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்குத் தெரிவித்து கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

இந்தக் கோரிக்கைக்குப் பதிலுரைத்த ஆளுநர், காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசிச் சாதகமான ஒரு பதிலைத் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments