யாழ்.வருகின்றார் மைத்திரி:வீடு வீடாக காவல்துறை?


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார். அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பிலிருந்து கிடைத்த உத்தரவுக்கு அமைவாகவ யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் அச்சுவேலி காவல் பிரிவுகளில் பொதுமக்களது குடும்ப பதிவுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி கொலைச் சதி வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் அவரது பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்தில் அவர் செல்லும் இடங்களை அண்டிய பிரதேசங்களில் குடியிருப்பாளர், நிறுவனங்களின் விவரங்களைச் சேகரிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தால் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 6ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகிறார். அவர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறும் கிராம சக்தி கலந்துரையாடலில் பங்கேற்கிறார். தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்குச் செல்வார். அங்கிருந்து அச்சுவேலிப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றில் இடம்பெறும் கிராம சக்தி திட்டம் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்கிறார்.

இந்த நிலையில் ஜனாதிபதி செல்லும் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், அரச - தனியார் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் மற்றும் வெளியிடங்களிலிருந்து வந்து செல்வோர் தொடர்பான விவரங்களை காவல்துறை திரட்டுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியிருந்தார்.

அப்பகுதிகளிலுள்ள வீடுகள் , நிறுவனங்களுக்கு இன்று வியாழக்கிழமை காலை சிவில் உடைகளில் சென்றவர்கள் தம்மை காவல்துறை என அடையாளப்படுத்தி , குடும்ப விவரங்களை கோரும் படிவங்களை உரிமையார்களிடம் கையளித்து அதனை நிரப்பி தருமாறு கோரி படிவங்களை நிரப்பி எடுத்து சென்றுள்ளனர்.  

 சில வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இல்லை என கூறப்பட்ட போது, வீட்டு உரிமையாளர் வந்ததும் இந்த படிவங்களை நிரப்பி இன்று வியாழக்கிழமை மாலைக்குள் கோப்பாய் காவல்நிலையத்தில் படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என கூறிச் சென்றுள்ளனர். 

இதவேளை, சில வீட்டு உரிமையாளர்கள் எதற்காக விவரங்களை கோருகின்றீர்கள் என  கேட்ட போது, தமக்கு எதுவும் தெரியாது எனவும் கொழும்பில் இருந்து  உத்தரவின் பேரில்தான் தாம் விவரங்களை கோருவதாக சிவில் உடையில் தம்மை காவல்துறை என அடையாளப்படுத்திய நபர்கள் கூறியுள்ளதாகவும் யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சுரேஸ்பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.  

இதனிடையே வீட்டு உரிமையார்களிடம் விவரம் சேகரிக்க கொடுக்க ப்பட்ட விண்ணப்ப படிவத்தில் " குடியிருப்பாளர் விபர அட்டவணை – காவல்துறை கட்டளை சட்டத்தின் 76ஆம் பிரிவின் கீழ் செய்யப்படும் கூற்று " என உள்ளது.  



No comments