மீண்டும் கொக்கிளாய் கடலில் பிரச்சினை?

கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் இடையிலான களப்பு பகுதியில் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு இடையூறாக புல்மோட்டை மீனவர்கள் கூட்டுவலைத் தொழிலில் ஈடுபடுவதாக சென் அன்ரணிஸ் மீனவர் சங்கத் தலைவர் வி.குமார் தெரிவித்தார். 

இது தொடர்பில் சென் அன்ரணிஸ் மீனவர் சங்கத் தலைவர் மேலும் விபரம் தெரிவிக்கையில் , கொக்குளாய் முதல் கொக்குத்தொடுவாய் வரையில் உள்ள 9 கிலோ மீற்றர் களப்பு பிரதேசத்தினை நம்பியே கொக்குளாய் , புளியமுனை , கொக்குத்தொடுவாய் , கருநாட்டக்கேணிப் பகுதியில் 450 குடும்பங்கள் வாழ்கின்றனர். இதன் பிரகாரம் களப்பு பிரதேசத்தில் இயந்திரப் படகோ அல்லது 1 .3/4 இஞ்சிக்கும் குறைவான வாலைகளோ பாவிப்பதும் சட்டப்படியான குற்றம் ஆகும். இதன் காரணமாக எமது மீனவர் சங்கத்திற்கு உட்பட்ட மீனவர்கள் குல்லாவில் சென்றே தொழில் புரிவது வழமையாகும். 

தற்போது மாரிகாலம் என்பதனால் இப் பகுதியின் நேற்றுப் பிரதேசத்தில் தற்போது இறால் , மீன் என்பன பெருக்க காலம் . அதனால் இன்னும் மிக அவதானம் தேவையான காலமாகும். இதேநேரம் எமது மீனவர்கள் தினமும் தொழிலிற்குச் சென்று வலைகளை கடலில் போட்டுவிட்டு கரைதிரும்பி மறுநாள் சென்றால் புல்மோட்டை மீனவர்கள் எமது மீனவர்களின் வலைகளை அறுத்து உள்நுளைந்து கூட்டுவலை பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு புல்மோட்டை மீனவர்களின் செயலினால் எமது மீனவர்களின் தற்போதைய வாழ்வாதாரம் மட்டுமன்றி எதிர்கால வாழ்வாதாரமும் பாதிப்படைகின்றது. இது தொடர்பில் திணைக்களங்களிற்கு தெரியப்படுத்தியும் உரிய தீர்வு கிட்டவில்லை. எனவே இதற்கு கடற்றொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்

No comments