சுரேஸ் விதித்த நிபந்தனை !!

எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டும் ஈபிஆர்எல்எவ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் பீட கூட்டம் நேற்று (07) திங்கட்கிழமை கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது நாட்டின் சமகால அரசியல் சூழல் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.  இதன்போதே வரவுசெலவுத்திட்டத்தில் தமிழ் பிரதிநிதிகளின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கவேண்டும் என ஆராயப்பட்டதாக குறிப்பிட்பட்டுள்ளது,

இது தொடர்பில் ஈபிஆர்எல்எவ் இனால் விடுக்கப்பட்ட அறிக்கையில்,

இதுவரை காலமும் இந்த அரசாங்கத்திற்கு எந்தவித முன்நிபந்தனைகளும் இல்லாமல், சகல வரவு-செலவுத் திட்டங்களுக்கும் அரசாங்கத்தின் ஏனைய அனைத்து செயற்பாடுகளுக்கும் எமது கட்சியைத் தவிர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வந்துள்ளது. ஆனால் தமிழ் மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் காத்திரமான தீர்வைக் காணமுடியவில்லை. வடக்கு மாகாணத்தில் மின்சாரசபை, பிரதேச சபைகளின் சிற்றூழியர் பணிகளுக்குக்கூட தென்பகுதி சிங்கள இளைஞர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால், அதே தகுதிகளுடன் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலையின்றிருக்க, இத்தகைய நியமனங்களை அங்கீகரிக்க முடியாதென்றும், அவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் குறைந்த பட்சம் பின்வரும் விடயங்கள் தொடர்பில் காத்திரமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையில், வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமாக இருந்தால்,

1 தமிழ் மக்களின் காணிகளை முழுமையாக விடுவிப்பது.
2 வனவளப் பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி, தொல்பொருள் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு போன்ற திணைக்களங்கள் இவற்றுடன் முப்படைகளின் அடாத்தான காணி அபகரிப்பு என்பவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
3 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
4 காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தாமதமின்றி நீதி வழங்குதல்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான தீர்வைக் காண்பதற்கு முன்வரும் பட்சத்தில் அதற்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோருவதாகத் தீர்மானிக்கப்பட்டது - என்றுள்ளது.

No comments