பொங்கியெழுகின்றார் மீண்டும் மாவை!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34 (1) என்ற பிரேரணைக்கு கடந்த காலத்தில் எமது அரசாங்கம் இணை ஆதரவு வழங்கியிருந்தது.

அதாவது நாட்டில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, இராணுவத்தினரும் யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி நிபந்தனை விதிப்பதானது, அவர் வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும்” என மாவை சேனாதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments