மக்களோ வெள்ளத்தில்:கொண்டாட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேசசபை!


தமிழர் தாயகமெங்கும் பெய்துவரும் பலத்த மழையினால் ஒரு லட்சம் வரையான எமது உறவுகள் பாதிக்கப்பட்டு பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டமைப்பு வசமுள்ள வவுனியா வடக்கு பிரதேசசபையில் ஆண்டு களியாட்ட நிகழ்வு கொண்டாடப்படுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்த கடும் மழையினால் வவுனியா வடக்கில் தமிழர்கள் வாழும் மிக முக்கிய எல்லைக்கிராமங்களான மருதோடை ,காஞ்சூரமோட்டை மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிகமாக மருதோடை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்கள் .அவர்களுக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் உணவு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருவதோடு எல்லைக்கிராமங்களில் உள்ள சில தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் உதவிவருகின்றன.

இந்த மக்களால் தெரிவுசெய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச சபை பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் ஏதுமே செய்யவில்லையென விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்றைய தினம் தவிசாளர்,உறுப்பினர்கள், இன்றைய ஒன்றுகூடலை புறக்கணித்திருக்கும் வேளையில் சபை உத்தியோகத்தர்களால் மிக கோலாகலமாக பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் ஒன்றுகூடல் நிகழ்வு நடாத்தப்பட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மக்களது அவலங்களை கண்டுகொள்ளாது இத்தகைய நிகழ்வுகள் தேவையாவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

No comments