ஜதேகவின் கூட்டணிக்கு பங்காளிக் கட்சிகள் இணக்கம்

ஐக்கிய தேசிய முன்னணியை, ‘ தேசிய ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு பங்காளிக்கட்சிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன.

எனவே, ஜனவரி முதல்வாரத்தில் பதிவுக்குரிய பூர்வாங்க நடவடிக்கை இடம்பெறும் என்று ஐக்கிய தேசியக்கட்சி இன்று அறிவித்தது.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய ஆகியன பங்காளிக் கட்சிகளாக  அங்கம் வகிக்கின்றன.

ஐக்கிய தேசிய முன்னணி இன்னும் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்படவில்லை. எனவே, ஐ.தே.கவின்  யானை சின்னத்திலேயே மேற்படி கூட்டணி தேர்தலுக்கு முகங்கொடுக்கின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஐக்கிய தேசிய முன்னணியை, தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாகப் பதிவுசெய்வதற்கு ஐக்கிய தேசியக்கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.

இதற்கு அக்கட்சியின் மத்தியசெயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது. நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவுஎடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் இந்நடவடிக்கைக்கு தோழமைக்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

No comments