ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து வெளியேறுகிறது மலையக மக்கள் முன்னணி

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசிலிருந்து வெளியேறுவதற்கு மலையக மக்கள் முன்னணி உத்தேசித்துள்ளது.

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சப் பதவி (cabinet ministry) வழங்கப்படாமை உட்பட மேலும் சில உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாகவே   இத்தகையதொரு முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு அக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.

” அரசிலிருந்து வெளியேறுவது குறித்து கட்சிக்குள் கலந்துரையாடப்பட்டுவருகின்றது. விரைவில் தீர்மானம் எடுக்கப்படும். ” என்று மலையக மக்கள் முன்னணியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் அரசியல் குழப்பம் தலைதூக்கியிருந்தவேளை,  மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பது குறித்து மலையக மக்கள் முன்னணி ஆழமாக பரீசிலித்தது. அக்கட்சியின் தலைவரான இராதாகிருஸ்ணனும், அரவிந்தகுமார் எம்.பியும், மஹிந்தவை நேரில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

எனினும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒருமித்த முடிவு, ஜனநாயகம் உட்பட மேலும் சில காரணிகளைக் கருத்திற்கொண்டு , ஐக்கிய தேசிய முன்னணியில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கு ம.ம.மு. முடிவெடுத்தது.

புதிய அரசு அமைந்ததும் தனக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவேண்டும் என இராதா வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு ஆரம்பத்தில் பச்சைக்கொடி காட்டிய ஐக்கிய தேசியக்கட்சி, இறுதியில் இழுத்தடிப்பு செய்தது. இராதாகிருஸ்ணனுக்கு அமைச்சரவை அந்தஸ்த்து அல்லாத அமைச்சுப் பதவியொன்றும், அரவிந்தகுமார் எம்.பிக்கு பிரதியமைச்சுப் பதவியும் வழங்கப்படும் என கூறப்பட்டது.

தற்போது இராதாவுக்கு மட்டுமே பதவி வழங்கமுடியும் என கூறப்படுவதாலேயே ஐக்கிய தேசியக்கட்சிமீது மலையக மக்கள் முன்னணி கடும் அதிருப்தியடைந்து, அரசிலிருந்து வெளியேறுவது குறித்து பரீசிலித்து வருகின்றது.

” அரசிலிருந்து வெளியேறினாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடனான உறவு பாதிக்காது. சுயாதீன அணியாக நாடாளுமன்றத்தில் எமது கட்சி எம்.பிக்கள் இருவரும் செயற்படுவார்கள்.” என்று ம.ம.முவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதேவேளை, மலையக மக்கள் முன்னணியை சமரசப்படுத்தும் முயற்சியில் ஆளுங்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் களமிறங்கியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments