கல்லா கட்டத்தொடங்கிய கூட்டமைப்பு!


சத்தம் சந்தடியின்றி தமது வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டமைப்பு கல்லாகட்ட தொடங்கியுள்ளது.

இன்றையதினம் இடம் பெற்ற வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்வின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா வடக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினரால் அத்தகைய மோசடியொன்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

புளியங்குளம் வடக்கு லைகா வீட்டுத்திட்டத்தில் கடந்த மாதம் நிரம்பிய வெள்ளத்தை வெளியேற்றும் நடவடிக்கை உபதவிசாளரது ஒதுக்கப்பட்ட நிதி உதவியின் மூலம் உறுப்பினர் விஜீகரன் என்பவரால் செயற்படுத்தப்பட்டு அதற்கான செலவுக்கடிதங்களும் சமர்ப்பிக்கப்பட்டது. 

குறித்த வேலையானது நாற்பதாயிரத்து நூற்று ஐம்பது ரூபாவிற்கு செய்யப்பட்ட போதும் ஐம்பத்து ஏழாயிரம் ரூபாவிற்கு வேறு ஒரு நபரிற்கு காசோலை எழுதப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலதிக பணத்திற்கு என்ன நடைபெற்றது என்பதற்கான விபரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை.

குறித்த நிதி மோசடி சிறிய தொகையாக இருந்தாலும் இதைவிட கூடிய நிதி கையாடல்கள் இடம்பெறலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த குற்றச்சாட்டினை தவிசாளர் மீது விஜீகரன் சுமத்தியபோது கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள் கூச்சலிட்டு குற்றச்சாட்டுக்களை திசைதிருப்ப முனைந்துள்ளனர்.

அத்துடன் இது தமது சபை எனவும் குறித்த உறுப்பினர் மன்னிப்புக்கேட்காது போனால் சபையை விட்டு வெளியேற்றுவோம் எனவும் பயமுறுத்தியுள்ளார்கள். எதிர்க்கட்சியாக இருக்கின்ற ஒருசிலர் கட்சி என்ற எல்லையைத்தாண்டி விஜீகரனால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டை ஆமோதித்து கருத்து வெளியிட்டுள்ளபோதும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் தமது எதிர்கால நலன் கருதியும் ஒப்பந்தங்கள் சலுகைகள் கருதியும் இவ்விடயங்களை குறித்து கவனம் செலுத்தாது வேடிக்கை பார்த்தாகவும் குற்றச்சாட்டுக்;கள் எழுந்துள்ளது.

No comments