முல்லைத்தீவில் அபாயகரமான வெடிபொருட்கள் மீட்பு


முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் வடக்கில் வசிக்கும் இந்திரதாசன் யாழினி என்பவர் வீட்டு முற்றத்தைப் பெருக்கி குப்பையைக் குழிதோண்டி புதைக்க முயற்சித்தபோது அபாயகரமான வெடிபொருட்கள் மண்ணில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொக்குத்தொடுவாய் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பொலிஸார் குறித்த வெடிபொருட்களை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றுவதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் நீதிமன்றத்தின் அனுமதி கிடைக்கும் வரை குறித்த பகுதியில் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொக்குத்தொடுவாய் மத்தி பகுதி தனியார் காணி ஒன்றில் கனரக வாகனத்தை தகர்த்து அழிக்கும் அபாயகரமான வெடிபொருள் ஒன்று மண்ணில் புதைந்திருந்த நிலையில் விசேட அதிரடிப்படையினரால் மீட்டு அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1984ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொக்குத்தொடுவாய் பிரதேசம் கொண்டு வரப்பட்டபோது அந்தப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

27 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த ஊரில் (2011 ஆம் ஆண்டு) பொதுமக்கள் மீள்குடியேறியபோது பாதுகாப்பான பிரதேசம் என இந்தப்பகுதி அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும், நீண்ட காலமாக இராணுவம் நிலைகொண்டிருந்த கொக்குத்தொடுவாய் பகுதியில் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் கூட உரிய முறையில் அகற்றப்படவில்லை. இராணுவம் வெடிபொருட்கள் புதைத்த இடம் இராணுவத்துக்குத் தெரியாதா? ஏன் உரியமுறையில அகற்றப்படவில்லை. இதனால் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்துள்ளோம். எனவே. எமது பகுதிகளை மீள கண்ணிவெடியகற்றும் செயற்பாட்டுக்கு உட்படுத்துமாறு அப்பகுதி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments