மன்னார் எலும்பு மாதிரிகள் ஜனவரியில் அமெரிக்காவிற்கு

மன்னார் – சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் வரும் ஜனவரி மூன்றாவது வாரம், காபன் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 120 தடவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அகழ்வுப் பணிகளின் மூலம், புதைகுழியில் இருந்து 21 சிறுவர்கள் உள்ளிட்ட 283 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் சில எலும்பக்கூடுகளின் மாதிரிகள், நீதிவானின் நேரடி கண்காணிப்பில், தெரிவு செய்யப்பட்டு, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள Beta Analytic laboratory  என்ற, ஆய்வகத்துக்கு, காபன் பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளன.

இந்த எலும்புக்கூடுகளின் மாதிரிகளை, அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவ கலாநிதி சமிந்த ராஜபக்ச, நேரடியாக அமெரிக்க ஆய்வகத்துக்கு கொண்டு செல்லவுள்ளார்.

சிறிலங்காவில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த மாதிரிகளை கொண்டு செல்வது ஒரு சிக்கலான செயல்முறை என்றும், எந்த குழப்பமும், நெருக்கடியும் வராமல் இவற்றைப் பரிசோதனைக்கு அனுப்ப முயற்சிப்பதாகவும்,  சமிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

எலும்பு மாதிரிகள் முத்திரையிடப்பட்ட பெட்டிகளில், தனது கைப்பையில் எடுத்துச் செல்லவுள்ளதாகவும், அனைத்து விமான நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments