நீதிபதிகள் நியமனத்தில் மைத்திரி, ரணில் அணிகள் முறுகல்

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் வெற்றிடங்களுக்கு, அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு மூன்று நீதிபதிகளின் பெயர்களை அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்திருந்தார்.

எனினும், 10 பேர் கொண்ட அரசியலமைப்பு சபையின் 7 உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபரின் இந்த பரிந்துரைகளை நிராகரித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் நடந்த அரசியலமைப்பு சபையின் இந்தக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் மகிந்த ராஜபக்சவும் கலந்து கொண்டார்.

மகிந்த ராஜபக்சவும், அவரது பிரதிநிதியும், சிறிலங்கா அதிபரின் பிரதிநிதியான மகிந்த சமரசிங்கவுமே, மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரையை ஆதரித்தனர்.

இந்தக் கூட்டத்தில் நீதியரசர்களின் நியமனம் தொடர்பாக நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது என்றும், எனினும் இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் 11 நீதியரசர்கள் இருக்க வேண்டும். தற்போது 9 நீதியரசர்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர்.

இந்தநிலையில், ஒக்ரோபர் 26 அரசியல் குழப்பத்துக்கு முன்னதாக, உச்சநீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கு, காமினி அமரசேகர, எஸ்.துரைராஜா ஆகிய இரண்டு நீதிபதிகளின் பெயர்களை அரசியலமைப்பு சபை சிறிலங்கா அதிபருக்கு பரிந்துரைத்திருந்தது.

இந்தப் பரிந்துரைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி, நீதிபதிகள் தீபாலி விஜேசுந்தர மற்றும் குமுதினி விக்கிரமசிங்க ஆகியோரின் பெயர்களை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நீதியரசர் கே.பி.பெர்னான்டோவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை செய்த பரிந்துரையையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் ஜனாதிபதிக்கும் அரசியலமைப்பு சபைக்கும் இடையில் இந்த விவகாரத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

No comments