ஆறு வாரத்துள் முடிவுக்கு வரும் மகிந்தவின் ஆட்சி

ஆறு வாரகாலம் சிறிலங்காவின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச வரும் புதன்கிழமை, பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன், நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபர் நடத்திய பேச்சுக்களின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பதை ஏற்றுக் கொண்டிருந்தார்.

அத்துடன், புதிய பிரதமரை நியமிக்குமாறு, வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுமாறும் அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில், வரும் புதன்கிழமை நாடாளுமன்றம் கூடும்போது, புதிய பிரதமரை நியமிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இதையடுத்து, இந்த தீர்மானம் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து கலந்துரையாடுவார்.

இதன் பின்னர், மகிந்த ராஜபக்சவை பதவிநீக்கம் செய்யும் அரசிதழ் அறிவிப்பை அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவை பதவிநீக்கம் செய்வதை விட வேறு வழியில்லை என்ற நிலை சிறிலங்கா அதிபருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பிரதமராக யாரை நியமிப்பது என்பதில் இழுபறி காணப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில், சிறிலங்கா அதிபர் உறுதியாக இருக்கின்ற நிலையில், அவரையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிவதாக, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஐக்கிய தேசிய முன்னணியுடன் சிறிலங்கா அதிபர் இன்று மீண்டும் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments