மகிந்தவை பதவி நீக்க கோரும் மனு ஒத்திதிவைப்பு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாத மஹிந்த ராஜபக்ஷ பிரதமராகப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

122 நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நேற்று முற்பகல் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த மனுவுக்கு எதிராக அடிப்படை எதிர்ப்பு மனு தாக்கல் செய்யப்படும் என்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை விசாரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று சட்டவாளர் காமினி மாரப்பன தெரிவித்தார்.

இந்த மனு நாடாளுமன்ற நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதால், இதனை விசாரிப்பதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று சட்டவாளர் ரொமேஸ் பெர்னான்டோ வாதிட்டார்.

அதேவேளை, மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டவாளர் கனகஈஸ்வரன், அரசமைப்பின் 140 ஆவது பிரிவின்படி, உத்தரவுகளைப் பிறப்பிக்க, மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

எதிர்மனுதாரர்கள் தரப்பில் மனோகர டி சில்வா உள்ளிட்ட சட்டவாளர்கள் நேற்று தமது வாதங்களை முன்வைத்தனர். சட்டவாளர்களான குஷான் டி அல்விஸ், அலி ஷார்பி உள்ளிட்டோர் இன்னமும் தமது வாதங்களை முன்வைக்கவில்லை.

இவர்களின் வாதங்கள், எதிர்வரும் 3ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் ஆரம்பமாகும். இதையடுத்து சட்டவாளர் கனகஈஸ்வரன் பதில் வாதங்களை முன்வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments