கொழும்பு அரசியலில் அதிரடி மாற்றங்கள் - புதிய அரசு பதவியேற்கும் ?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்றும், நாளையும் நடத்தவுள்ள இரண்டு முக்கிய சந்திப்புகளை தொடர்ந்து,   திடீர் அரசியல் மாற்றங்கள் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


அரசியல் கைதிகளை விடுதலை  செய்வது தொடர்பாக,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   இன்று மாலை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

அதன்பின்னர் இரவு 8 மணியளவில்,  ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களை, ஜனாதிபதி சந்திக்கவுள்ளார்.தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்ச  பிரதமராக பதவி வகிக்கவும்,  அமைச்சர்கள் தமது பதவிகளை தொடரவும்,  மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று மாலை இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

மைத்திரிபால  இந்தச் சந்திப்புக்குப் பின்னர் முக்கியமான அரசியல் முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து,  தற்போதைய அரசியல் ஆட்டத்தில் திடீர் மாற்றங்கள் நிகழும்  வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

இதனால், இன்றைய  மாலைப்பொழுது,    அரசியலில்  முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கலாம்  என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments