மைத்திரியின் மூன்று கோரிக்கையும் மனோவால் நிராகரிப்பு!

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியை இன்று காலை சந்தித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை 8 மணியளவில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின் தம்மிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

“முதலாவதாக, புதிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.

இரண்டாவதாக, மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் போது அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கோரினார்.

மூன்றாவதாக, ஒருவேளை வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டாம், அவருடன் இணைந்து செயற்பட முடியாது என்று கோரினார்.

எனினும், இந்த மூன்று கோரிக்கைகளையும் நிராகரித்து விட்டோம்.

மகிந்த தலைமையிலான அரசாங்கத்தை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், பிரதமர் யார் என்பதை நாங்களே தீர்மானிப்போம், அதனை வேறெவரும் தீர்மானிக்க அனுமதியோம் என்றும் சிறிலங்கா அதிபரிடம் கூறினோம்” என்று தெரிவித்தார்.

#Mano Ganesan

No comments