பிரான்சில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நந்தியார் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

நிகழ்விjல், பொதுச்சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளரும் கப்டன் சூரியத் தேவனின் சகோதரருமான திரு.மரியதாஸ் அன்ரனிதாஸ் அவர்கள் ஏற்றிவைக்க  மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடரினை 27.11.1998 அன்று கோப்பாய் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.உயிரவன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க திருஉருவப்படத்திற்கான மலர்மாலையை 1998 இல் நாகர் கோவில் பகுதியில் வீரச்சாவடைந்த லெப்.சின்னவன் அவர்களின் தாயார் அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை என்பன இடம்பெற்றன.

மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர் மற்றும் சகோதரர் மேடையில் நினைவுக் கேடயம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார்.

அவர் தனது உரையில், இன்று மாவீரர்களின் தியாகத்தையும் மாவீரர் பெற்றோரின் கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளர் திரு.இராமகிருஸ்ணன் அவர்களும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

மாணவர்களின் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் வெளிப்பாடுகளை அனைவரும் அமைதியாக இருந்து உணர்வுபூர்வமாக அனுபவித்ததைக் காணமுடிந்தது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீட்டுப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் பொதுமக்கள் அனைவருக்கும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையினர் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும், தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.


No comments