ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: பொதுஜன முன்னணி?


ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக ஒன்றிணைந்து மகிந்த ராஜபக்ச தரப்பும், மைத்திரிபால சிறிசேன தரப்பும், அடுத்த கட்ட அரசியல் நகர்வு விடயத்தில் முட்டிக் கொள்ளத் தொடங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவது குறித்து நேற்று முன்தினம்,  தீவிரமாக ஆராயப்பட்ட நிலையில், திடீர் தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதா, பொதுஜன முன்னணியில் போட்டியிடுவதா என்ற குழப்பம் தீவிரமடைந்தது.
தமது கட்சி தாமரை மொட்டு சின்னத்தில் மட்டுமே போட்டியிடும் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் செயலர், சாகர காரியவசம், வெளியிட்ட கருத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றப் பகுதியில் கடந்த 5ஆம் நாள் நடத்தப்பட்ட பேரணியின் போது, தமது தரப்பினர் ஓரம்கட்டப்பட்டமை குறித்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரான மகிந்த அமரவீர, அந்தப் பேரணியில் பேசத் தயாரான போது, பொதுஜன முன்னணியின் தலைவர் ஒருவர், அவருக்கு வாய்ப்பு வழங்க மறுத்துள்ளார். இது தமது கட்சியின் பேரணி என்று அவர் கூறியிருக்கிறார்.
மகிந்த அமரவீர மாத்திரமன்றி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச, கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க,  மற்றும் சிறிலங்கா அதிபரின் ஆதரவாளர்கள் எவரும், இந்தப் பேரணியில் உரையாற்ற அனுமதிக்கப்படவில்லை.
இருந்த போதிலும், பவித்ரா வன்னியாராச்சி, விமல் வீரவன்ச, றோகித அபேகுணவர்த்தன, உதய கம்மன்பில ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
பேரணி நடந்த போது, கோட்டே பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகள், பதாதைகள் அனைத்திலுமே, மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களே இருந்தன.
மகிந்தவின் படைகள் மட்டுமே பங்கேற்ற அந்தப் பேரணியில் மைத்திரிபால சிறிசேன புறக்கணிக்கப்பட்டார்.
அதேவேளை, முன்னைய அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து, மகிந்த அமரவீரவிடமும், துமிந்த திசநாயக்கவிடமும் முறையிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ள விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், சிறிலங்கா சுதந்திரக் கடட்சி அமைச்சர்கள், பொதுஜன முன்னணியின் கீழ் போட்டியிட வேண்டியிருக்கும். அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டாலும், திட்டமிட்டு அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர, மகிந்த ராஜபக்சவின் முன்பாக மண்டியிட்டு வணக்கும் படம் ஒன்றை பசில் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments