முதலில் ஊடல் - பின்னர் கூடல்: மைத்திரியுடன் கூட்டமைப்பு!


வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணி நான்காவது தடவையாக இன்று வியாழக்கிழமை கூடியுள்ளது.ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,புதிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடக்கு கிழக்கு ஆளுநர்கள் மற்றும் மஹிந்த அரசின் அமைச்சர்கள் பங்கெடுத்திருந்தனர்.

கடந்த மூன்றரை வருடங்களாக வடகிழக்கில் எதனையும் செய்யவிடாது ரணிலே தடுத்ததாக தெரிவித்திருந்த மைத்திரி பிரதமரை மாற்றிய பின்னர் கூட்டி கூட்டம் இதுவாகும்.ஏற்கனவே இதனை புறக்கணிக்க முன்னாள் வடமாகாண முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்த நிலையில் மீண்டும் கூட்டமைப்பு இக்கூட்டத்தில் பங்கெடுத்துள்ளது.

இதனிடையே நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும்போது அதற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம் எனவும், பிரேரணையை எதிர்த்து வாக்களிக்குமாறும் கூட்டமைப்பினரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டிருந்தார்.

ஆனால், இந்த வேண்டுகோளுக்கு இணங்கமாட்டோம் என்று கூட்டமைப்பினர் தெரிவித்தபோது, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க முடியாவிட்டால் அதனை ஆதரிக்காமல் நடுநிலையாவது வகியுங்கள் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார். எனினும், ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கையை அடியோடு நிராகரித்த கூட்டமைப்பு  “புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்க்க முடிவெடுத்த நாம் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்போம்” எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments