கரையைக் கடந்தது கஜா புயல்


வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜ புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரவு முழுக்க கடும் மழை பெய்தபோதும் புயலின் தாக்கம் ஆங்காங்கே சிறு அளவில் உணரப்பட்டது.  யாழ் குடாநாட்டின் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததோடு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

நாகை இடையே இன்று அதிகாலை (16 திகதி) 3.30 மணியளவில் கரையை கடந்ததையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் புயலின் கடைசி பகுதி முழுமையாக கரையை கடந்துள்ளது.

கஜ புயலை 100 சதவீதம் பாதுகாப்புடன் எதிர்கொண்டுள்ளோம் என நம்புகிறேன். பலத்த கற்று நின்ற பின்னரே சேதமதிப்பு முழுமையாக தெரியவரும். மழைக்கு பின் நோய்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தாய்லாந்தின் வளைகுடா மற்றும் அதையொட்டிய மலேசிய தீபகற்பப் பகுதியில் கடந்த 8-ஆம் திகதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. இது மேற்கு நோக்கி நகர்ந்து அந்தமான் கடல் பகுதியில் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது மேலும் வலுவடைந்து கஜ புயலாக கடந்த 11-ஆம் திகதி உருவெடுத்தது. இப்புயல் வியாழக்கிழமை பிற்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

10 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு: சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், பாம்பன், தூத்துக்குடி, ராமேசுவரம், தூத்துக்குடி துறைமுகங்களில் 8-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், புதுச்சேரி, காரைக்காலில் 9-ஆம் எண் எச்சரிக்கை கூண்டும், நாகப்பட்டினத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது. சில இடங்களில் கடல் அலை 2 மீட்டர் உயரம் வரை எழும்பி சீற்றத்துடன்காணப்பட்டது.

110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: நகரும் வேகம் குறைந்ததால் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 80 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் புயல் மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடந்தது.

புயல் தீவிரம் 6 மணி நேரம் நீடிக்க வாய்ப்பு: புயல் கரையைக் கடந்தாலும் அதன் தீவிரம் 6 மணி நேரம் வரை இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும்.

No comments