ஒன்றுபட்டு போராடுவதே மாவீரர்களிற்கு அஞ்சலி!


தமிழ்த் தேசிய இனம் ஒன்றுபட்டு போராடுவதே மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலியென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

மாவீரர் தினத்தை முன்னிட்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே தமிழ்த் தேசிய இனம் ஒன்றுபட்டு போராடுவதே மாவீரர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையி;ன் முழுவிபரம் வருமாறு:

உரிமைகளைப் பாதுகாக்கவும் அடக்குமுறைகள் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுபடவும் உலகெங்கும் ஆயுதப் போராட்டங்கள் உட்பட பல்வேறுவகையான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இரண்டாம் உலகமகாயுத்தம் ஜெர்மனிய ஹிட்லரின் உலகை அடிமைப்படுத்தும் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெற்றது. நாசிகளிடமிருந்து உலகை மீட்க உலகின் பன்னாட்டு மக்கள் இணைந்து போராடினர். அதில் அடையாளம் தெரியாத உயிரிழந்தவர்களின் கல்லறைகள்கூட பல்வேறுபட்ட நாடுகளிலும் பாதுகாக்கப்பட்டும் நினைவுகூரப்பட்டும் வருகின்றது. பல்வேறு நாடுகளும் தமது நாட்டை முழுமையாகவோ பகுதியாகவோ ஆக்கிரமிக்க முனைந்த எதிரிநாடுகளுடன் யுத்தங்களில் ஈடுபட்டு தமது நாட்டினைப் பாதுகாக்க உயிர்த்தியாகம் செய்தவர்கள் மாவீரர்களாகவும் கதாநாயகர்களாகவும் போற்றப்பட்டு நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டு அந்தந்த நாட்டு மக்களால் நினைவுகூரப்பட்டும் மரியாதை செலுத்தப்பட்டும் வருகின்றமை உலக வழக்கமாகும். இவ்வாறு நினைவுகூரப்படுபவர்கள் அந்தந்த நாட்டிற்கு தியாகிகளாகவும் எதிரிநாட்டிற்கு எதிரிகளாகவுமே பார்க்கப்படுகின்றனர்.

காலனித்துவத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய சுபாஷ் சந்திரபோஸாக இருக்கட்டும், வாஞ்சிநாதனாக இருக்கட்டும், பகத்சிங், சுகதேவ் போன்றவர்களாக இருக்கட்டும் அகிம்சை வழியில் போராடிய வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணியம் சிவா போன்றவர்கள்கூட காலனித்துவவாதிகளால் பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்பட்டவர்களே. ஆனால் இந்திய மக்களைப் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களே. தேச விடுதலைக்காக உயிர்நீத்த தியாகிகளே. இலங்கையில் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள் பாரிய அளவில் நடைபெறாத போதிலும் காலனித்துவத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்கூட காலனித்துவ ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டனர். அவர்களை இன்றைய மைத்திரி அரசு காலனித்துவத்திற்கு எதிராகப் போராடிய கதாநாயகர்களாக பிரகடனம் செய்துள்ளது.

எந்தவொரு நாட்டின் மக்களோ தேசிய இன விடுதலைக்காகப் போராடி அதியுயர் தியாகமான உயிர்த்தியாகம் செய்த போராளிகளையும் மக்களையும் நினைவுகூர்வதும் மரியாதை செலுத்துவதும் உலக வழக்கம் மட்டுமல்ல அந்தந்த மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். இதனை மறுதலித்து மாவீரர்தினம் கொண்டாடக்கூடாது என அரசாங்கம் அறிவித்திருப்பதானது உலக நாகரிகத்திற்கு முரணானதும் அடிப்படை மனித உரிமை மீறல்களும் ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டதாகப் பிரகடனம் செய்து அதனை மார்தட்டி விழா எடுக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் சமூகம் விடுதலைப் புலிகள் மீதான தடையை இன்னமும் நீக்காமல் இருப்பது புலிகளின் பெயரை வைத்து தென்னிலங்கையில் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதேயன்றி வேறில்லை. அத்தகைய தடைச்சட்டம் இருப்பதனாலேயே நீதிமன்றம் மாவீரர்தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு வரையறைகளை விதிப்பதாகத் தோன்றுகின்றது. இத்தகைய பிழைப்பு அரசியலை நடாத்தும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளினதும் அரசினதும் போக்குகள் நிறுத்தப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களுக்காக விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப் புரட்சி அமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியவற்றின் பலநூறு வீரர்கள், தோழர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். இவர்களுக்கான நினைவாலயங்கள் அமைப்பதும் நினைவுகூர்வதும் மரியாதை செலுத்துவதும் நாட்டின் ஒவ்வோர் தமிழ் மகனின் உரிமையும் கடமையும் ஆகும்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பொறுத்தவரை, ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த ஏறத்தாழ மூன்று இலட்சம் வரையிலான போராளிகள் பொதுமக்கள் அனைவரும் நினைவுகூரப்படவேண்டியவர்களும் மரியாதை செலுத்தப்படவும் வேண்டியவர்களே. சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சமூகம் தமிழ் மக்களின் இத்தியாகங்களைத் தனது அரசியல் பிழைப்பிற்குப் பயன்படுத்துவது புரிந்துகொள்ளக்கூடியதே. அது கண்டிக்கத்தக்கது மட்டுமன்றி, தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியே சென்றவர்களும், ஆயுதப் போராட்டத்தை தூரத்தே நின்று வேடிக்கை பார்த்தவர்களும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வறுமைப்பட்டவர்களும் வேலையற்றவர்களும் என்று பிரகடனப்படுத்தி ஆயுதப் போராட்டத்தையே கொச்சைப்படுத்தியவர்கள் இன்று தாம்தான் விடுதலைப் புலிகளின் உண்மையான வாரிசுகள் என்றும் தமிழ்த் தேசியத்தின் காப்பாளர்கள் என்றும் தமக்குத் தாமே விருது வழங்கிக்கொள்வது நகைப்பிற்குரியதாகும் 

ஈழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புக்கள் மத்தியில் பல்வேறு முரண்பாடுகளும் போட்டாபோட்டிகளும் இருந்தன. இருப்பினும் இவற்றை மீறி திம்பு பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழப் புரட்சி அமைப்பு ஆகிய நான்கு அமைப்புக்களும் ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்ற குடையின்கீழ் ஒன்றுபட்டன. இன்று பிரபலமாகப் பேசப்படும் திம்பு கோட்பாடு உருவாக இந்த ஈழ தேசிய விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர்களே காரணகர்த்தாக்கள் ஆவர்.

இதேபோன்றே 2002ஆம் ஆண்டு அனைத்து தமிழ்த் தலைமைகளையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டு தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் ஐக்கிய முன்னணி உருவானது. இந்தக் கூட்டை உருவாக்குவதில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் பிரபாகரனும்கூட பெரும்பங்காற்றியிருந்தனர். தமிழ் மக்களின் விடுதலைக்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைவது அவசியம் என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டதன் விளைவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதயமாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தைத் தொடர்ந்து, நான், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் உட்பட விடுதலைப் புலிகளின் சில முக்கியஸ்தர்களும் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டோம். இக்கலந்துரையாடலானது பொட்டம்மான் அவர்களின் முயற்சியில் முல்லைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏறத்தாழ மூன்று மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைளை எவ்வாறு சர்வதேச சமூகத்திற்கு முன்வைப்பது? எமது போராட்டத்திற்கு இந்தியாவினதும், ஏனைய நாடுகளினதும் ஆதரவை எவ்வாறு பெற்றுக்கொள்வது? அச்சமயத்தில் கொழும்பில் ஏற்பட்டிருந்த அரசியல் போக்குகள், விடுதலைப் புலிகளுக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் இடையிலான உறவுகளை சீராக்கல் போன்ற பல விடயங்கள் பேசப்பட்டன. 

இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம் என்னவென்றால் தனிப்பெரும் ஆயுதப் போராட்ட அமைப்பாக எழுச்சிபெற்ற விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழ்த் தலைமைகளின் ஒன்றுபட்ட செயற்பாட்டின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயற்பட்டிருக்கும்போது விடுதலைப் புலிகளின் வழிவந்தவர்களாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் ஒருசிலர் அல்லது ஒருசில கட்சிகள் தமிழ் மக்களின் விடுதலையை தாம் மட்டுமே வென்றுவிடுவோம் என்று கங்கனம் கட்டிச் செயற்படுவது அவர்களின் அரசியல் அறிவை கேள்விக்குள்ளாக்குவதுடன் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயற்பட்ட விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

எனவே, மாவீரர்களுக்கான உண்மையான அஞ்சலி என்பது தமிழ் தேசிய இனம் ஒன்றுபட்டு செயற்பட்டு அவர்களின் நோக்கங்களை அடைவதிலேயே தங்கியுள்ளதென சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments