அரசியல்வாதிகளின் வசதிகருதிய மறதியும் மகாஜனங்களின் அதிகூடிய ஞாபகமும் -பனங்காட்டான்

சொன்னதை மறப்பதும் சொல்லாததைச் செய்வதும் அரசியல்;வாதிகளின் வழக்கமான பழக்கம். புதிய அரசியலமைப்பு வந்தால் என்வேலை முடிந்ததெனக் கூறிவிட்டு அரசியலிலிருந்து விலகிவிடுவேன், அரசமைப்பு வராவிட்டால் எனது தோல்வியை ஒப்புக்கொண்டு அரசியலிலிருந்து விலகிவிடுவேன் என்று கனடா விஜயத்தின்போது கூறியதை கூட்டமைப்பின் சுமந்திரன் மறந்துவிட்டாரா?


எங்கள் நாட்டில் சில வீடுகளை பேய் பிடித்த வீடு அல்லது பிசாசுகள் குடிகொண்ட இடமென்று சொல்வார்கள். இந்த வீடுகளில் திடீரென்று அலறல் சத்தம் கேட்குமாம். சலங்கைகள் குலுங்குவதுபோல ஓசை எழும்புமாம். பாத்திரங்களும் தளாபடங்களும் உருளுவதுபோல காதைப் பிளக்கும் சலசலப்பு ஏற்படுமாம். இரவு நேரங்களில் முகம் தெரியாத தேற்றமொன்று வெள்ளைச் சேலையுடன் வந்து சகலரையும் கிலி கொள்ளச் செய்யுமாம்.

மைத்திரி - ரணில் கூட்டரசாங்கத்துக்குள் இப்போது பேய் புகுந்துவிட்டது போன்ற காட்சிகள் இடம்பெறுவதாக ஆட்சித்தரப்பு பிரமுகர்கள் சொல்கிறார்கள். நாட்டில் சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மைச் சுற்றியிருக்கும் எவரையும் நம்பமுடியாதவராக, பேய்பிடித்தவர் போல சிதம்பர சக்கரத்தில் நின்று சுழலுகிறார்.

இவர் யாரை நம்பவில்லை என்பதைவிட, யாரை நம்புகிறார் என்று பட்டியல் போடுவது இலகுவானது. - இப்பட்டியலே சிறிதாக இருக்கும். தம்மை ஆட்சிக்குக் கொண்டுவர பின்னால் நின்று செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகவை, மைத்திரி இப்போத நம்பவில்லை.
தமது பங்காளியான பிரதமர் ரணிலையும் இவர் நம்பவில்லை. தம்மைப் பதவியிலிருந்து அகற்ற ரணில் சதித்திட்டம் போடுவதாக நினைக்கிறார்.

சட்டம் ஒழுங்கு என்பவற்றுக்குப் பொறுப்பான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரையும் ஜனாதிபதி நம்பவில்லை. எந்தவேளயிலும் இந்த அமைச்சர் மாற்றப்படலாம்.
பொலிஸ் மாஅதிபரை எள்ளவும் நம்பவில்லை. வீட்டுக்கு போகலாமென்றே கூறிவிட்டார். ஊடககாரரைச் சந்தித்த பொலிஸ் மாஅதிபர் தமது தாயாரின் மனநிலை குறித்து கண்ணீர் சிந்தக் கதை சொல்கிறார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலரும் ரணிலின் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரும் பதவி பறிப்புப் பட்டியிலில் உள்ளனராம். இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு வங்கி ஆகியவற்றின் தலைவர்களும், இயக்குனர்களும் முற்றாக இரவோடிரவாக மாற்றப்பட்டுள்ளனர். இவற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அறிவிக்காமலே இந்த அதிரடி நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

இதுவரை சொல்லப்பட்டவை அனைத்தும் உள்நாட்டு அரசியல் விவகாரங்கள். தமது ஆட்சியைப் பலப்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்றும் இவற்றைக் கூறலாம். ஆனால், இறுதியாக அவர் வீசிய குண்டு வீரியமானது. இது உண்மையாக வெடிக்குமானால் வீசியவர் மட்டுமன்றி அவருடன் இருப்பவர்கள் அனைவருமே முடிந்துவிடுவர்.

தம்மைக் கொலை செய்வதற்கு இந்திய உளவுப்படையான றோ திட்டம் தீட்டியுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்தபோது, அங்கிருந்த அமைச்சர்கள் மூச்சுக்கூட விடாது அசையாது இருந்தனர். அச்சமா, ஆச்சரியமா, அவநம்பிக்கையா அவர்கள் இவ்வாறு இருந்ததற்கு காரணம் என்று யாருக்கும் தெரியாது.

றோ பற்றி தாம் தெரிவித்த இரகசியம் மறுநாள் ஊடகங்கள் வாயிலாக பகிரங்கமாகுமென்று அப்போது ஜனாதிபதி நினைத்திருக்க மாட்டார். அது முக்கியமான செய்தியாக இலங்கைப் பத்திரிகைகளில் மட்டுமன்றி இந்திய ஊடகங்களிலும் வந்தபோதே அதன் தாக்கத்தை அவர் புரிந்துகொண்டார். அதனாற்தான் உடனடியாக இந்தியப்பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து தன்னிலை விளக்கம் கொடுத்தார்.

கொழும்பில் கைதான இந்தியர் ஒருவரை முன்னிலைப்படுத்தி, தம்மீதான கொலை முயற்சியில் றோவை சம்பந்தப்படுத்த சிலர் முனைவதாகத் தாம் கூறியது திரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மைத்திரி மோடியிடம் கூறியுள்ளார்.

மைத்திரியின் முன்கதைக்கான பின்விளக்கத்தை நம்புவதற்கு மோடி படுமுட்டாளாக இருக்கவேண்டும். அப்படியில்லை என்று நிரூபிக்கவே, கொழுமப்பிலுள்ள இந்தியத் தூதுவர் தாமதமன்றி மைத்திரியை சந்தித்து உரையாடினார். இதனை உரையாடினார் என்று கூறுவதைவிட விளக்கம் கேட்டார் என்றும் சொல்லலாம்.

வேலிக்கு ஓணான் சாட்சி போல மைத்திரிக்கு வக்காலத்து வாங்குகிறார் ராஜித சேனரத்ன.
இங்கு ஒன்று மட்டும் புரிகிறது. தம்மைச் சுற்றி ஏதோ நடைபெறுகிறது என்ற அச்சத்திலும், தமக்கு ஏதோ நடைபெறப்போகிறது என்ற பிரமையிலும் மைத்திரி தலைசுற்றி ஆடுகின்றார். சிலவேளை இரவில் சொப்பனம் ஏதாவது கண்டுவிட்டு பிரதமரைக் கைதுசெய்யலாம், நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம், மகிந்தவை தம்மோடு அணைக்கலாம். இதில் எது நடந்தாலும் ஆச்சரியப்பட நேராது.

இதனாலோ என்னவோ, ஜனாதிபதியும் பிரதமரும் தனித்தனியாக வெளிநாட்டுச் சுற்றுலாக்களில் இறங்கியுள்ளனர். இதனை எழுதும்போது பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் மோடியை சந்திக்க அங்கு சென்றுள்ளார்.

பேய் பிடித்த வீடு இன்னொரு தேர்தல்வரை இப்படித்தான் இருக்கும்போலத் தெரிகிறது.
இனி, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதியும் பிரதமரும், தனியாகவும் கூட்டாகவும் எவ்வாறு ஏமாற்றுகின்றனர் என்று பார்ப்போமா?

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்கு ஒரு முடிவில்லை. விசாரணைக்குழு, ஆணைக்குழு என்று ஒருவாறு நான்காண்டுகளைப் போக்கிவிட்டனர்.

பொதுமக்களின் காணிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக விடுவித்து ஊடகங்களில் படம் காட்டியாயிற்று. மிகுதிக் காணிகளை விடுவிக்க அரசாங்கத்திடம் படையினர் பணம் கேட்கின்றனர்.

படையினருக்கு அரசாங்கம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே தமிழ் மக்களின் நிலபுலன்களை இராணுவம் விடுவிக்குமொன்று கூட்டமைப்பு கூறுகிறது. இதனைக் கேட்கும் அப்பாவி மக்களை மாங்காய் மடையராக்கும் கதையிது.

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்னர் ஜனாதிபதியை கூட்டமைப்பினர் சந்தித்துப் பேசினர்.கடந்த 17ம் திகதி மீண்டும் சந்திப்பதெனவும், அப்போது முடிவு சொல்வதாக ஜனாதிபதி கூறியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சப்பந்தன் தெரிவித்தார்.
சொன்னபடி 17ம் திகதி சந்தித்தபோது, இது பற்றி முடிவெடுக்க மேலும் ஒரு வார அவகாசம் ஜனாதிபதி கேட்டுள்ளார். இது இப்படியே ஒவ்வொரு வாரமாக இழுபட்டுச்செல்ல காலம் காலமாகிவிடும்.

இதனைப் பார்க்கையில் கோழி தனது குஞ்சுகளுக்குப் பால் கொடுத்த கதைபோலவே  தெரிகிறது. வீடொன்றில் ஒரு நாயும் கோழியும் நேசமாக இருந்தன, நாய் தனது குட்டிகளுக்குப் பால் கொடுப்பதைப் பார்த்த கோழிக்குஞ்சுகள் தங்களுக்கும் பால் வேண்டுமென தாய்க்கோழியிடம் கேட்டன. ஒவ்வொரு நாளும் நாளை தருகிறேன் என்ற பதிலையே தாய்க்கோழி குஞ்சுகளுக்கு சொல்லிவர நாட்கள் ஓடின. காலக்கிரமத்தில் பால் கேட்பதை குஞ்சுகள் மறந்துவிட்டன.

அடுத்தது, புதிய அரசமைப்பும் அரசியல் தீர்வும் எப்படியிருக்கிறது எனப் பார்ப்போம். இது ஒருபோதும் நிறைவேறாது என்று சிங்களக் கட்சிகள் சிலவற்றின் தலைவர்களே கூறத்தொடங்கிவிட்டனர்.

அரசாங்கம் கூட்டமைப்பை நன்றாக ஏமாற்றி வருகிறதென மகிந்தவின் பொதுஜன முன்னணித்தலைவர் ஜி.எல். பீரிஸ் செல்லுமிடமெங்கும் சொல்லிவருகிறார்.

‘நம்பிக்கை நட்சத்திரம்’ சம்பந்தனும் இப்போது நம்பிக்கையில்லாப் பக்கம் சரிந்து கொண்டிருக்கிறார்.  ஆனால் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மட்டும் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறார். ஆமை வேகத்தில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் நிச்சயம் புதிய அரசமைப்பு வருமென அடித்துக் கூறுகிறார்.
இருப்பினும், ஓர் இடைச்செருகலை கடந்த 15ம் திகதி யாழ். ஊடக மையத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுமந்திரன் கூறியுள்ளார். “புதிய அரசமைப்பு முயற்சி விடுபட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகிவிடுவேன்” என்பதே சுமந்திரனின் அறிவிப்பு.
இந்த ஒன்றுக்காகவாவது அவரது நேர்மையை மக்கள் மெச்சவேண்டும்.

அதேசமயம், சில மாதங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்தபோது தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் கூறிய விடயத்தை அவருக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

“புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்காகவே நான் கூட்டமைப்பு அரசியலுக்கு வந்தேன். புதிய அரசமைப்பு உருவானால் எனது பணி முடிந்துவிட்டது என்று அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவேன். தற்செயலாக புதிய அரசமைப்பு வராவிட்டால் எனது தோல்வியை ஒப்புக்கொண்டு அரசியலிலிருந்து விலகிவிடுவேன்” என்று மிக நிதானமாக அன்று சுமந்திரன் கூறினார். ஆக, இரண்டில் எதுவானாலும் தாம் அரசியலிலிருந்து விலகுவது நிச்சயம் என்பதே அவர் கூறியது. ஆனால், இப்போது அன்று சொன்னதன் அரைவாசியை மட்டுமே இன்று கூறுகிறார். அரசியல்வாதிகளுக்கு இரண்டு வகையான மறதிகள் உண்டு. ஒன்று உண்மையான மறதி. அடுத்தது வசதி கருதிய மறதி.
சுமந்திரனுக்கு ஏற்பட்டுள்ள மறதி எந்த வகையானது?

No comments