வெடுக்குநாறி மலை: தேசிய சுதந்திர முன்னணி களத்தில்!


ஆக்கிரமிப்பு ஆபத்திலுள்ள வெடுக்குநாறிமலைக்கு இலங்கையின் கூட்டு எதிரணியின் குழுவொன்று காவல்துறை பாதுகாப்புடன் வருகை தந்து திரும்பியுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் ,தேசிய சுதந்திர முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஜயந்த சமரவீர,நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் இன்றைய தினம் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

கூட்டு எதிரணியோடு வருகை தந்திருந்த தொல்லியல் திணைக்களத்தைச்சேர்ந்த இருவர் முற்றுமுழுதாக சிங்களத்தில் வரலாற்றுக்களை திரிவுபடுத்தி பல பொய்யான தகவல்களை அவர்களுக்கு கூறியதை அவதானிக்க முடிந்ததென அங்கு நின்றிருந்த தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே கூட்டு எதிரணியினருக்கும் ஆலயத்தை சூழ்ந்த உள்ளுர் தமிழ் மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்;பட்டதையடுத்து காவல்துறை பாதுகாப்போடு அவர்கள் வெளியேறி சென்றனர்.

சிங்களத்தில் தொல்லியல் திணைக்களம் கூட்டு எதிரணியினருக்கு கூறிய விளக்கங்களில் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் இந்த கோயிலை இந்த பகுதி மக்கள் வைத்திருக்கின்றனரெனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் தேவநம்பிய தீஸன் காலத்தை சேர்ந்ததெனவும் விளக்கமளித்துள்ளனர்.

1977ம் ஆண்டு இந்த மலையில் புத்த விகாரை ஒன்று இருந்திருக்கின்றது. இந்த மலை முற்றுமுழுதாக பௌத்த மக்களுக்கே சொந்தமானதாகும். இந்த மலைக்கு சிங்கள பெயர் ஒன்று இருக்கின்றதென்ற வகையில் அவர்கள் விளக்கமளித்திருந்தனர்.

இதனிடையே தாங்கள மலையில் ஆய்வு செய்ய தமிழ் மக்கள் தடையாக இருக்கின்றனரென தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் கூற தாங்கள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசவுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments