ரணிலா-மஹிந்தவா: கொழும்பில் பலப்பரீட்சை!


தெற்கில் தமது அரசியல் பலத்தை காண்பிக்க மஹிந்த தரப்பும் ரணில் தரப்பும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.ஜதேகட்சியிலிருந்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் பாயவுள்ளதாக சொல்லப்படுகின்றது.அதேவேளை ரிசாட் தரப்பின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மஹிந்த  பக்கம் செல்வதாலும் ஏற்கனவே சுதந்திர கட்சி ஆதரவை விலக்கியுள்ளதாலும் ரணில் தரப்பினால் 113 ஆதரவை நிரூபிக்க முடியாதென மைத்திரி தரப்பு மஹிந்தவிற்காக குரல் கொடுத்துவருகின்றது.

தற்போதைய நிலைப்படி மஹிந்தவிடம் சுதந்திரக்கட்சியின் 95 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஈபிடீபியின் டக்ளஸ் தேவானந்தாவும்,ஆறுமுகம் தொண்டமான் 2 உறுப்பினர்களும், ரிசாட் பதியூதீனின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். ஏற்கனவே மஹிந்த பக்கம் பாய்ந்த ஐக்கிய தேசியக்கட்சியின் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுமாக 105 பேர் உள்ளனர்.ஜக்கிய தேசியக்கட்சியிலிருந்து வருகின்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்தால் மகிந்தவுக்கு 121 உறுப்பினர்கள் உள்ளனர்.ஆனால் பெரும்பான்மையினை நிரூபிக்க 113 உறுப்பினர்கள் போதுமென சொல்லப்படுகின்றது.

இதனிடையே இருதரப்பும் தம்மிடம் ஆதரவு கோரியிருப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.எனினும் யாருக்கு ஆதரவளிப்பதென்பது தொடர்பில் தாம் முடிவு செய்யவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் மனோகணேசன்,ஹக்கீம் உள்ளிட்ட தரப்புக்கள் ரணிலுக்கு ஆதரவை வெளியிட்டுள்ளன.இந்நிலையில் கூட்டமைப்பு மற்றும் ஈபிஆர்எல்எவ் தரப்புக்கள் யாருக்கு ஆதரவளிக்குமென்ற எதிர்பார்ப்பு கொழும்பில் உச்சம் பெற்றுள்ளது. 

இதேவேளை புதிய பிரதமர் தலைமையில் நாளை புதிய அமைச்சரவை அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விசேட கூட்டம் ஒன்று தற்போழுது புதிய பிரதமராக நியமனம் பெற்றுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் கொழும்பில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

நாளை மறுதினம் (29) அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் நியமிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன

No comments