'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் தேவையில்லை?

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தேவையில்லை. நிலவுகையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பது  ஒன்றே தேவையென சிவில் சமூக அமையம் தெரிவித்தள்ளது.
இன்று அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம்  தீர்வின்றி தொடர்வது தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கரிசனை கொள்கின்றோம். 

இப்பிரச்சினைக்கான தீர்வு அரசியல் ரீதியாக எடுக்கப்படவேண்டியது. ஆனால் நல்லிணக்கத்தை பேசும் அரசாங்கம் இவர்களை அரசியல் கைதிகளாக அல்லாமல் குற்றவாளிகளாகவோ சாதாரண சந்தேக நபர்களாகவோ பார்க்கின்றது. இவ்விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவுகளுக்கு அரசாங்கம் விடுத்து தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. 

இதே வேளை 09.10.2018 அன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிதாக ஒரு சட்டத்திற்கான (Counter Terrorism Bill) சட்ட மூலம் பாராளுமன்றிற்கு விவாதத்திற்கு வந்துள்ளதை நாம் அவதானிக்கின்றோம். மேற்படி சட்ட மூலமானது காவல் துறையிடம் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகளாக முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகளைக் கொண்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் மோசமான சில அம்சங்களை தவிர்த்து வந்தாலும் நீண்ட கால தடுப்பு போன்ற விடயங்களில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் இல்லை என்பதே உண்மை. எது எவ்வாறாக இருப்பினும் 'பயங்கரவாதம்' தொடர்பில் புதிதாக சட்டங்கள் எவையும் இலங்கைக்கு தேவையில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். இந்நாட்டின் சாதாரண குற்றவியல் சட்டங்களே 'பயங்கரவாத' குற்றங்கள் ஏதேனும் தொடர்பில் கையாளப்  போதுமானவை ஆகும்.
 
இது ஒருபுறமிருக்க பயங்கவாத தடை சட்டம் நீக்கப்பட்டு புதிதாக சட்டம் கொண்டுவரப்பட்டாலும் பழைய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து பழைய சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்படுவதோடு வழக்கு விசாரணையும் நடைபெறும் என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய சட்ட மூலம் ஏற்பாடு செய்வதானது பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. தமிழ் அரசியல் கைதிகள் புதிய சட்டம் வந்த பின்னரும் தடுத்து வைக்கப்படவும் அவர்களிடம் பயங்கவாத தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து அவர்களை குற்றவாளிகளாகக் காணவுமே அரசாங்கம் விரும்புகின்றது. புதிய சட்டத்தின் இவ் நிலைமாறுகால ஏற்பாடுகளைத் தானும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என நாம் வேண்டி நிற்கின்றோம். 

எனவே தமிழ் சிவில் சமூக அமையம் நிபந்தனையின்றி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என அரசாங்கத்தை கோருகின்றது. பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதோடு பாராளுமன்றம் நிற்க வேண்டும். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை என நாம் வலியுறுத்தி கூறுகின்றோமென 
தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

No comments