Header Shelvazug

http://shelvazug.com/

கூட்டணிக்கு திட்டு: கூட்டமைப்புடன் கூட்டில் முன்னணியும்!


முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் அரசியல் கட்சி அறிவிப்பு எதிர்பார்த்தது போல பல மட்டங்களிலும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

ஒருபுறம் கூட்டமைப்பின் அனைத்து மட்டங்களிலும் திட்டித்தீர்ப்பது தொடங்கிவிட மறுபுறம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒருசாரார் கொள்கையென புறப்பட்டுள்ளனர்.அதிலும் முதலமைச்சர் யாருடன் கூட்டணியென அறிவிக்காத  நிலையில் மக்கள் சலித்துப்போகும் பிரச்சாரங்கள் தொடர்கின்றன.

முதலமைச்சர் ஒரு நச்சு செடியென கூட்டமைப்பின் சிவமோகன் தெரிவித்துள்ளார். சிறீதரனோ இன்னொரு படி போய் துரோகியென்றுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கமோ கூட்டமைப்பை  பிளவுபடுத்துமளவுக்கு சி.வி.விக்னேஸ்வரன், ஒன்றையும் கிழித்துக்கொண்டுசெல்லவில்லை. ஏற்கெனவே ஒரு சகோதரர் போயிருக்கின்றார். அதுபோன்று இன்று முன்னாள் வடக்கு முதலமைச்சரும் போயிருக்கின்றார். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு என்று சொல்லமுடியாது” என்றிருக்கின்றார்.

அரசியல் வரலாற்றை எடுத்துப் பார்க்கும்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் மூளையென வர்ணிக்கப்பட்ட அமரர் நவரட்ணம், கட்சியை விட்டு வெளியேறியபோது அப்போது அதுவோர் அலையாகவே இருந்தது. ஆனால் , காலப்போக்கில் அந்த விடயம் இருந்த இடம்தெரியாமல் போயிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதுபோலவே, வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனும் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளார். விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணியை பிரகடனப்படுத்தியுள்ளார், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்மைவிட்டு விலகியும் விலகாமலும் ஏற்கெனவே இருக்கின்றார். பெரிய அரசியல் கட்சிகளில் எல்லாம் இவ்வாறு நடப்பது சாதாரண விடயமாகவே நாங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரிந்துசென்றவர்களுடன் பேசுவதற்கு நாங்கள் என்றும் தயாராகவே இருக்கின்றோம்.மக்களும் அவர்களுடன் பேசவேண்டும். நாங்கள் விக்னேஸ்வரனை வலிந்து அரசியலுக்குள் அறிமுகப்படுத்தினோம், மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தினோம் என்றும் தெரிவித்த அவர், விக்னேஸ்வரன் என்பதற்காகவோ,அவரது ஆளுமையை  கருத்தில்கொண்டோ நாங்கள் அவரை வலிந்து அரசியலுக்குள் இழுக்கவில்லை. அப்போது பொதுக்கூட்டங்களில் பேசும்போது தமிழர்கள் தொடர்பாக நேரிய சிந்தனையுடன் இருப்பதாக அப்போது வெளிப்படுத்தி வந்தார். அவரது அந்த கொள்கை கோட்பாடுகளுக்கு மேலாக உயர்நீதிமன்ற நீதியரசர் என்கின்ற அந்த உருவம் காரணமாக நாங்கள் கவரப்பட்டோம் என்றார்.

குறிப்பாக எங்களது மத்திய குழுவில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நியமிக்கவேண்டும் என்ற பிரேரணையை நான்தான் கொண்டுவந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இருந்தோம். இணைந்து தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டோம். பாரிய வெற்றியைப்பெற்றார். உலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. ஆனால்; தமிழர்களின் வரலாறு இவ்வாறு துன்பங்களை சுமந்தே செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலேயெ இருக்கவேண்டுமோ தெரியவில்லை.

விக்னேஸ்வரன் படிப்படியாக எங்களுடன் ஒத்துழைத்து செல்லாத நிலையே இருந்துவந்தது. அவர் கட்சி சாராதவர் என்று தன்னை கூறினாலும் அவர் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவே தேர்தலில் போட்டியிட்டார். தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களுக்கு அழைத்தபோதிலும் அவர் ஒரு கூட்டத்துக்கும் வரவில்லை.

விக்னேஸ்வரனின் பிரிவு என்பது உடனடியான ஒரு சலனத்தை ஏற்படுத்தும். அரசமைப்பில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் எல்லோரும் தமிழ் மக்களின் பிரச்சினையை வென்றெடுக்கும் அவசியத்தை உணரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பின் திட்டித்தீர்த்தல்களின் மத்தியில் முன்னணியின் சின்ன கஜனும் அதே பாணியில் களமிறங்கியுள்ளமை உள்நோக்கத்தை கொண்டதாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இப்போது பிறந்திருக்கின்ற குழந்தைக்கு திருமணம் செய்துவைப்பதற்கான பேச்சுக்களினில் இப்போதே மும்முரமாகின்றதான கோசமாகவே முன்னணியின் கருத்துக்களை மக்கள் பார்க்கின்றனர்.

கூட்டமைப்பின் திட்டித்தீர்ப்புக்களை மக்கள் புறமொதுக்கிவிட்டாலும் முன்னணியின் கருத்துக்கள் மக்களிடையே உளவியல் ரீதியாக சோர்வை தோற்றுவிப்பதாகவே மக்கள் கருதுகின்றனர்.

No comments