அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லை : சித்தார்த்தன்


அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை நிறுத்துவதற்காக நம்பிக்கையான வாக்குறுதி ஒன்றினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோரியபோது கதைத்துப் பேசி முடிவெடுக்காது வாக்குறுதி எதையும் வழங்க முடியாது என மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் நாங்கள் நினைப்பது போல இந்த அரசாங்கம் இலகுவாக அல்லது கெதியாக எதனையும் கதைக்காது என்றும் இந்த அரசாங்கம் அரசியல் கைதிகள் விவகாரத்தை இழுத்தடிக்கவே போகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஆராயும்பொருட்டு சிவில் சமூகங்களின் பிரதிநிதிகளுக்கும் முதலமைச்சருக்குமிடையிலான அவரச சந்திப்பொன்று இன்று கைதடியிலுள்ள முதலமைச்சர் செலயகத்தில் நடைபெற்றது. அங்கு கருத்து வெளியிட்டபோதே  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,

அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தபின் ஐந்தாவது நாள் நான் அவர்களை சிறைச்சாலையில் சந்தித்திருந்தேன். அப்போது அவர்களிடம், நாங்கள் நினைப்பது போல இலகுவாக அல்லது கெதியாக இந்த அரசாங்கம் எதனையும் கதைக்காது. இந்த அரசாங்கம் இதனை இழுத்தடிக்கத்தான் போகின்றது. இது எனது தனிப்பட்ட கருத்து. எனினும் அரசியல்கைதிகளாகிய உங்களை தொடர்ச்சியாக உணவுத் தவிர்ப்புப் போராட்டங்களில் விட்டுவிட முடியாது. ஏனெனில் நீங்கள் யுத்தகாலத்திலும் சரி பின்னரும் சரி நிறைய பாதிக்கப்பட்டுவிட்டீர்கள் எனக் கூறினேன்.

அதன்போது அவர்கள் இந்தப் போராட்டத்தை நிறுத்துவதானால் எங்களுக்கு உத்தரவாதம் தரவேண்டும் என கூறினார்கள். இலங்கை அரசாங்கத்தைத் தவிர உத்தரவாதம் தரக்கூடிய ஒரு தரப்பும் இல்லை. உங்களை விடுவிப்பதா, அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புவதா அல்லது குறுகிய புனர்வாழ்வா என எதுவானாலும் அரசாாங்கம்தான் முடிவெடுக்கவேண்டும். நாங்கள் அரசாங்கத்துடன் கதைக்க மட்டுமே முடியும் என நான் அவர்களுக்கு கூறினேன்.

இவர்கள் தொடர்பில் நான் பிரதமரிடம் கதைத்தேன். பிரதமரிடம் கதைக்க முன்னமே நான் அவர் என்ன கூறுவார் எனவும் அரசியல் கைதிகளிடம் கூறிவிட்டேன். அற்றனி ஜெனரல், சொஜிஸ்ர ஜெனரல் என அவை இவை எல்லாரையும் கூப்பிட்டுக் கதைக்கவேண்டும் என பிரதமர் கூறுவார் என கூறியிருந்தேன். ஆனாலும் நான் பிரதமரிடம் கதைப்பேன் என கூறியிருந்தேன். அவ்வாறே பிரதமரிடம் கதைத்தேன்.

அவரோ நாலைந்துநாள் வெளிநாட்டில் இருப்பேன். வந்ததும் கதைக்கிறேன் என்றார். நான் அவரிடம் இல்லை சேர் இது சீரியஸ் விடயம் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் எனக்கு ஒரு உத்தரவாதமாவது தாருங்கள் அதனைக் கூறி அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருகின்றோம்.  எமக்கு ஏதாவது ஒரு உத்தரவாதம் தாருங்கள் என கேட்டேன். ஆனால் அவர் தாங்கள் கதைத்துப் பேசி முடிவெடுத்தே கூறுவதாக கூறிவிட்டார் - என்றார்.

No comments