போதையை ஒழிக்க அதிகாரம் கேட்கும் இராணுவம்


போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா காவல்துறைக்கு, இராணுவம் ஏற்கனவே உதவிகளை வழங்கி வருகிறது.

சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு பலமானது. இராணுவப் புலனாய்வுப் பிரிவின் வலையமைப்பு நாட்டுக்கு வெளியேயும் பரந்து விரிந்துள்ளது.

போதைப்பொருள் சம்பந்தமான தகவல்களை, சிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு, காவல்துறையுடன் பகிர்ந்து வருகிறது.

போதைப்பொருளுக்கு எதிராக சிறிலங்காவின் முப்படைகளும் போரிட்டு வருகின்றன.

எனினும், போதைப்பொருளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு, சட்டரீதியான அதிகாரத்தை சிறிலங்கா இராணுவம் கோரியுள்ளது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா இராணுவத்துக்கு அதிக பொறுப்பு உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments