ரணிலின் பாதுகாப்பு 10 ஆக குறைப்பு !


சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 10 ஆக குறைக்க, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை விலக்கிக் கொள்ளுமாறும், அவருக்கான பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை, 10 பேராக குறைக்குமாறும், சிறிலங்கா காவல்துறை மா அதிபர் நேற்று மாலை, பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான, பிரதி காவல்துறை மா அதிபர் ஜெயந்த விக்ரமசிங்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவசரகதியில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறும், அதுபற்றி தனக்கு அறிவிக்குமாறும் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

“பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு, புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் அறிவித்துள்ளார்.

இதனால், ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சிறப்பு அதிரடிப்படை மூலம் வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை நீக்குமாறும், அவருக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் போதும் என்றும் காவல்துறை மா அதிபர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கூட்டப்படும் வரையில் ரணில் விக்ரமசிங்கவின் பிரதமருக்கான சிறப்புரிமைகளை உறுதி செய்யுமாறு, சிறிலங்கா அதிபருக்கு, சபாநாயகர் நேற்று கடிதம் அனுப்பியிருந்த நிலையிலும், கூட பாதுகாப்பை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றப் போவதாக கூட்டு எதிரணியினர் மிரட்டி வரும் சூழலில், அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments