அமைச்சரவைக் கூட்டத்தில் ரணில் மைத்திரி கடும் வாக்குவாதம்


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

துறைமுக அபிவிருத்தி தொடர்பான, அமைச்சரவைப்பத்திரம் ஒன்றை அமைச்சர் மகிந்த சமரசிங்க சமர்ப்பித்ததை அடுத்தே, வாக்குவாதம் ஏற்பட்டது.

கிழக்கு முனையத்தின் மீது இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.

அப்போது, எல்லாவற்றிலும்  வெளிநாட்டுத் தலையீடுகள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் தனது தீவிரமான கவலையை வெளிப்படுத்தினார்.

கிழக்கு கொள்கலன் முனையத்தை வழங்க முடியாது என்று தாம் ஏற்கனவே இந்தியாவுக்கு கூறி விட்டதாகவும், அவர்களுக்கு ஒரு முனையம் தேவைப்பட்டால்,  மேற்கு முனையத்தில் பார்த்துக் கொள்ள முடியும், அதற்கு முதலீடு செய்ய வேண்டும் என்றும் சிறிலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தேசிய பொருளாதார சபைக் கூட்டத்துக்கு முன்னதாக இந்த அமைச்சரவைக் கூட்டம்,  இடம்பெற்றது.

அதிபர் செயலகத்தில் நடந்த தேசிய பொருளாதார சபைக் கூட்டத்துக்கு சிறிலங்கா அதிபர் தலைமையேற்றிருந்த நிலையில், அந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments