நிபந்தனையற்ற விடுதலையே தேவை:வணபிதா சக்திவேல்!


அரசியல் கைதிகளை நிபந்தனையற்று விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த அவர் அனுராதபுர சிறைச்சாலையில் 12அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமது வாழ்வை தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்த அவர்கள் இன்று சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அவர்களுடைய விடுதலை தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி வாக்குறுதிகளை அள்ளி வழங்கி இருந்தார். எனினும் மூன்றாண்டுகளுக்குப் மேலாகியும் விடுதலை இல்லை. இவர்கள் சாவைத் தழுவக் கூடாது. ஏனெனில் அவர்கள், தமிழர்கள் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் மன்னிப்பு வழங்க வேண்டும் என கேட்கிறார். அவர்களுக்கு மன்னிப்பு தேவையில்லை. அவர்களுக்கு நிபந்தனையற்ற விடுதலையை கோருகின்றோம்.

அதே போல புனர்வாழ்வு அளிக்க கோருகின்றனர். தமிழ் மக்களின் அரசியலுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு தான் புனர்வாழ்வு கொடுக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியலுக்காக செய்யப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு தேவையில்லை என தெரிவித்தார்.

கடந்த வரவு செலவு திட்ட விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அரசியல் கைதிகள் விடயத்தை நிபந்தனையாக முன் வைத்து ஆதரவை வழங்கி இருக்கலாம். ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை எனவும் அருட்தந்தை ம.சக்திவேல் தெரிவித்தார். 

No comments