வடக்கு கிழக்கில் மக்கள் காணிகளை டிசம்பருக்குள் விடுவிக்க உத்தரவு


வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வ உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருட டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிப்பதை நிறைவுசெய்யுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக நேற்று (03) பிற்பகல் ஒன்று கூடியது. பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பணிப்புரையை விடுத்தார் எனக் கூறப்படுகின்றது.

முறையான கால சட்டகத்திற்குள் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்குமாறும் இதன் முன்னேற்ற நிலைமைகளை அடுத்த மாதம் இடம்பெறும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின்போது முன்வைக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படையினர் வசமுள்ள பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்களை விடுவிப்பது தொடர்பாகவும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தே தேசிய நத்தார் விழாவில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு கூடியிருந்த மக்கள் முன் ஆறு மாத காலப்பகுதிக்குள் வடக்கில் படையினர் வசமுள்ள மக்களது அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்படும் என கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments