வட மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்தது


வட மாகாண சபையின் பதவிக்காலம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தது. அதன்படி, ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மாகாணசபை தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்துள்ளது. இந்த மாதம் வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது.

மேல் மற்றும் ஊவா மாகாண சபைகளின் பதவிக்காலம் அடுத்த வருடம் முதல் காலாண்டில் நிறைவடையவுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை புதிய முறைப்படி நடத்துவதற்கு எல்லை நிர்ணய குழுவினர் தயாரித்த அறிக்கை அண்மையில் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்தது. தற்போது அந்த அறிக்கை பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக் குழுவிற்கு மீளாய்விற்காக வழங்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளது. எல்லை நிர்ணயக் குழுவின் காலத்தை நீடிக்க வேண்டும் என பிரதமர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேர்தலை விரைவில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் சிறியானி விஜேவிக்ரம குறிப்பிட்டிருந்தார்.

அதில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். பழைய அல்லது புதிய முறைப்படி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

No comments