தமிழர் தாயகம் நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டது!

வட கிழக்கு மாகாண தமிழர் தாயகம் நீண்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டது. போதிய சரித்திர ரீதியான ஆய்வுகள் சில காலத்திற்கு முன்வரையில் செய்யப்பட்டிருக்காவிடினும் தற்போது எமது கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் அடையாங்கள் பல, தொன்றுதொட்டு நிலவி வந்த எமது வாழ்க்கை முறைபற்றி வெளிவந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள மரபுரிமைகள் நிலையம் திறப்பு விழா யாழ். நல்லூர் ஸ்தான சி.சி.த.க பாடசாலை, செம்மணி வீதி, நல்லூரில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றிருந்தது.

அங்கு உரையாற்றிய முதலமைச்சர் அமைச்சர் சர்வேஸ்வரன் அவர்களின் மனதில் உதித்த இந்த மரபுரிமைகள் பாதுகாப்பு தொடர்பான உயரிய சிந்தனைக்கு பண்பாட்டலுவல்கள் திணைக்களம் செயல்வடிவம் கொடுத்து இன்று திறந்து வைக்கப்படுகின்ற இந்த “மரபுரிமைகள் நிலையத்தை” வைபவ ரீதியாக திறந்து வைத்து உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன்.

வட கிழக்கு மாகாண தமிழர் தாயகம் நீண்ட ஒரு பாரம்பரியத்தைக் கொண்டது. போதிய சரித்திர ரீதியான ஆய்வுகள் சில காலத்திற்கு முன்வரையில் செய்யப்பட்டிருக்காவிடினும் தற்போது எமது கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் அடையாங்கள் பல, தொன்றுதொட்டு நிலவி வந்த எமது வாழ்க்கை முறைபற்றி வெளிவந்துள்ளன. எம்முடைய உணவுப்பழக்க வழக்கங்கள், பாவனைப் பொருட்கள், சடங்குகள் போன்றவை தனித்துவமானவை. தொன்றுதொட்டு பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வந்தவை. அத்துடன் எமது வாழ்வியல் முறைகளில் அறிவியல் சார்ந்த தொழில்நுட்பமும் ஆங்காங்கே காணப்பட்டன. எனினும் கால ஓட்டத்தில் வௌ;வேறு கலப்பு முறைகளினால் இவை மாற்றம் பெற்றுள்ளன. மேலைத்தேய கலாசாரங்களை நாம் பின்பற்றத் தொடங்கியதாலும், எமது சந்ததி வழிவந்த அடையாளங்களை நாம் தொலைக்க முற்பட்டதாலும் இன்று எமது வாழ்வியல் அடையாளங்கள் எம்மைவிட்டு தூர விலகிச் சென்று கொண்டிருக்கின்றன. 

ஆனால் எமது வாழ்க்கை முறையில் காணப்பட்ட கலாசார விழுமியங்கள் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்கள் என்பவற்றை மேலைத்தேயத்தவர்கள் பலர் அடையாளம் கண்டுள்ளார்கள். எமது தொல்பொருட்களை அதிக விலைகள் கொடுத்து வாங்கிச் சென்று தமது பகுதிகளில் பயன்படுத்த எத்தனிக்கின்றார்கள். எமது பழக்க வழக்கங்களில் காணப்பட்ட அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் பற்றி உலகறியச் செய்துள்ளார்கள். எனினும் இவ்வாறான மரபுவழிப்பட்ட எமது வாழ்க்கைமுறை பற்றி எமது இளம் தலைமுறையினர் அறியாமல் இருப்பது துர்திர்டமே. 

இங்கு வாழும் எமது மூதாதையர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை பற்றிய அறிவு அவர்களின் பாவனைப் பொருட்கள் பற்றிய அறிவு ஆகியன இன்று  அருகிப்போன நிலையில் அவற்றை எமது இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் மீள அடையாளப்படுத்துவதும், அவற்றின் பயன்பாடுபற்றி தெரியப்படுத்துவதும், இருப்பவற்றைப் பேணிப் பாதுகாப்பதும், அவற்றைக் காட்சிப்படுத்துவதும் எமது கடமையாகின்றன. 

எமது முன்னோர்களின் பயன்பாட்டுப் பொருட்களான அம்மி, ஆட்டுக்கல், திருகை, பித்தளைக்குடம், மூக்குப் பேணி, மண்ணெண்ணெய் விளக்குகள் போன்ற அனைத்தும் தற்காலச் சந்ததியினருக்குப் பெயரளவில் கூட தெரியாத பொருட்களாக மாறிவிட்டன. என்னுடைய இளம் பராயத்தில் சுமார் எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் இவை அனைத்தும் எங்கள் வீட்டில் பாவனைப் பொருட்களாக இருந்தன. இன்று மிக்சி, க்ரைன்டர், ப்ளாஸ்டிக் வாளி, பீங்கான் கிண்ணங்கள், மின்விளக்குகள் போன்றவை அவற்றின் இடத்தைப் பிடித்துவிட்டன. 

எனினும் அன்று எமது மக்களின் பாவனையில் இருந்த மண்பாத்திரங்கள், கருங்கல்லினால் செய்யப்பட்ட கருவிகள், செப்புப் பாத்திரங்கள், ஓலைச்சுவடிகள், நாளாந்த வாழ்க்கையில் பயன்படுத்திவந்த பாவனைப் பொருட்கள், அவற்றினூடு எமது மூதாதையர்கள் பயன்படுத்திய அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றை மேலைத்தேய வரலாற்று ஆய்வாளர்கள் பலர் விதந்து பாராட்டியுள்ளார்கள். அவற்றில் கண்ட தொழில்நுட்ப சூச்சுமங்களை அற்புதம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். 

சூழலில் மாசுக்களை ஏற்படுத்தக்கூடிய பாதிப்புக்கள் ஏற்படாத வகையில் நடைமுறையில் இருந்த வந்த அன்றைய எமது மரபுரிமை வழக்கானது இன்றைய எமது இளம் தலைமுறையினருக்குத் தெரியாமலே போய்விட்டது. இன்று சேதன உரத்தில் உருவாகிய பழங்கள், மரக்கறிகள் போன்றவற்றை கூடிய விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளோம். அக்காலத்தில் சேதன உரத்தில் உருவாகிய உணவுப் பொருட்கள் மட்டுமே பாவிப்பில் இருந்தன. இன்றைய காலகட்டத்தின் விசித்திரம் என்னவென்றால் சேதன உரம் கொண்டு உருவாகிய உணவுப் பொருட்களுக்கு நாம் கூடிய விலை கொடுத்து வாங்குகின்றோம். ஆனால் அவ்வாறான உணவுப் பொருட்களை பாரிய சுபர் மார்க்கட்டுகளில் பாதுகாக்க அவற்றுள் நச்சுத்தன்மை கொண்ட இரசாயன கலவைகளை உட் செலுத்துகின்றோம் அல்லது பூசுகின்றோம் என்பதை அறியாமலே நச்சுச் சூழலுக்கு அடிமையாகின்றோம்.

பண்டைய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் சில கிராமப்புறங்களில் இன்னும் பாவனையில் காணப்படும் எமது மரபுரிமை அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையிலேயே இந்த மரபுரிமை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. அன்று மக்களின் பாவனையில் இருந்துவந்த பாக்குவெட்டி, துலா, கருங்கல்லினால் அமைக்கப்பட்ட அம்மி, ஆட்டுக்கல், உரல் போன்ற பாவனைப் பொருட்கள் அறிவியல் வளர்ந்திராத அக்காலத்திலேயே நெம்புகோல் தத்துவம், சில்லும் அச்சாணியும் போன்ற விஞ்ஞான அறிவியல் தத்துவங்களை வெளிப்படுத்துவனவாக அமைந்திருந்தன என்று இன்றைய விஞ்ஞானிகள் கூறி வியக்கின்றனர். 

தண்ணீர் கூஜாவில் நீர் வைத்து குளிர்ந்த சுத்தமான நீரை தாகம் தீரும் வரை எமது முன்னோர்கள் அருந்தி மகிழ்ந்தனர். நாமோ குளிர்சாதனப் பெட்டியில் நீரை வைத்து கடுமையான குளிர் நீரை அருந்துகின்றோம். விளைவு விரைவாகவே பற்கள் பழுதடைகின்றன. உடம்பில் சளிப்பற்று அதிகரிக்கின்றது. 

அக்காலத்தில் மதிய உணவு, காலை மாலை உணவுகளை ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு எடுத்துச் சென்று உண்ண வேண்டிய தேவைகள் ஏற்பட்ட போது அவற்றை எடுத்துச் செல்வதற்கு சிறிய அழகான ஓலைப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைப் பெட்டியில் உணவை எடுத்துச் சென்ற போது உணவு பழுதடைகின்ற தன்மை தவிர்க்கப்பட்டது என்று இன்றைய விஞ்ஞானி கூறுகின்றான். நீர்ப்பற்று எதுவும் இன்றி உடன் சமைத்த உணவு போல் மிகவும் காத்திரமாக அந்த உணவு காணப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். அத்துடன் பனை ஓலையில் இருக்கும் சில தாதுப் பொருட்களும் உணவுடன் சேர்ந்து அந்த உணவிற்கு மேலதிக சுவையை வழங்குகின்றது என்றும் கூறுகின்றார்கள். 

நாம் சிறுவர்களாக இருந்த போது ஈய மூலாம் பூசிய பித்தளை மூக்குப் பேணிகளில் தேநீர் அருந்திய சுவையைத் தற்போதும் எண்ணிப் பார்க்கின்றோம். அந்தக் காலத்தில் நாம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரும் போது தேநீர் கடைகளில் பளிச்சென்று மினுக்கிய மூக்குப் பேணிகளில் பால்த் தேநீரை நன்றாக இழுத்து ஆற்றி அருந்தத்தருவார்கள். அதுபோன்ற சுவையான தேநீரை எந்தவொரு நட்சத்திர விடுதியிலோ அல்லது வெளிநாட்டிலோ நாம் அதன் பின் அருந்தியதில்லை. அக்காலத் தேநீர் கடைகள் களிமண்ணால் ஆக்கப்பட்டு, தென்னோலையால் கூரை வேயப்பட்ட சாதாரண குடிசைகள். பசுமை மிக்க இயற்கையுடன் வாழ்ந்த வாழ்க்கை அன்றைய வாழ்க்கை. எமது அடையாங்கள் இன்று தொலைக்கப்பட்டு சுன்னாம்புக்கற் சூழைக்குள் எமது சீவியம் நடைபெறுகின்றது. எமது வாழ்க்கை முறை மாறிவிட்டது. நோய்களும் கூடி விட்டன. மருத்துவர்களும் மருந்தகங்களுந்தான் நன்றாக உழைக்கின்றார்கள்!   

இன்று பித்தளை மூக்குப் பேணியில் தேநீர் அருந்துவது நாகரீகம் இல்லை என்று  வெள்ளைக்களியில் உருவாக்கப்பட்ட ஊரி ரூ ளுயரஉநச ற்கு நாம் மாறிவிட்டோம். ஆனால் மேலைத்தேயத்தவர்களோ செப்புப் பாத்திரத்தில் தேநீர் அருந்த விரும்புகின்றார்கள் அல்லது தேநீருக்குள் ஒரு செப்பு நாணயத்தை இட்டு தேநீர் அருந்துகின்றார்கள். அதிலே விஞ்ஞான ரீதியான நன்மைகளைக் கண்டுள்ளார்கள்.

அந்தக் காலத்தில் மூக்குப் பேணிகளில் தேநீரை அண்ணாந்து குடிப்பது ஒரு தனி சுகம். சுகம் மட்டுமல்ல சுகாதாரமும் கூட. அந்த சுகத்தை இன்றைய சந்ததியினர் சந்திக்கவில்லை. 

அதேபோன்று வாழை இலை, தாமரை இலை ஆகியவற்றில் உணவையிட்டு உண்ணும் போது கோப்பைகளில் உணவை உண்பதைவிட சுவையாக இருக்கும். ஆட்டுக்கல்லில் அரைத்த உழுத்தம் மாவில் சுட்ட வடை தனியான சுவை கொண்டிருக்கும். அதேபோன்று அம்மியில் அரைத்த இஞ்சி சேர்த்த சம்பல் இருந்தால் எத்தனை இடியப்பத்தையும் வரிசையாக உள்ளே தள்ளலாம். இவைகள் எல்லாம் எமது மூதாதையர்கள் எமக்கு அறிமுகப்படுத்திய சுகாதாரத்துடன் கூடிய பழக்கவழக்கங்கள். இன்று மூக்குப் பேணியை அருங்காட்சியகங்களில் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் நாம் எம்முடைய பால்ய வயது வாழ்க்கைக்கு நீங்கள் மாறுங்கள் என்று கூறவில்லை. வாழ்க்கை மாற்றம் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டியதொரு நிகழ்வு. ஆனால் எமது அடிகளைத் துருவி ஆராய்வதிலும் அவற்றில் காணும் தொழில்நுட்ப சிறப்பை பங்கிட்டுக் கொள்வதிலும் பல நன்மைகள் இருக்கின்றன. 

இவற்றைக் கருத்தில் கொண்டே எமது வாழ்வியல் தத்துவங்களை அடையாளப்படுத்தி எளிய வாழ்க்கைமுறையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை தேடித்தேடிச் சேர்த்து ஒரு அரும்பொருட் பெட்டகமாக பாதுகாக்க முனைந்துள்ளோம். ஒரு நிலையத்தை அரும்பொருட் காட்சியகத்திற்கு ஒப்பான வகையில், மரபுரிமைகள் நிலையமாக உருவாக்கி அங்கே பல பொருட்களையும் அவற்றின் படங்களையும் காட்சிப் பொருட்களாக காண்பிக்க விழைந்துள்ளோம். எமது முறைமைகள், மரபுரிமைகள் இந்த சந்ததியுடன் மட்டும் நிறைவுபெற்றுவிடா. அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் இந்த வாழ்வியல் முறைமைகள் கொண்டுசெல்லப்பட வேண்டும். எமது பாரம்பரியங்களில் எமக்கு அறிவும், ஆர்வமும் பிறக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். 

மேலும் தமிழர்களின் வாழ்வின் உயரிய திருமணச் சின்னமாக விளங்கும் தாலியானது ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயரிய வாழ்வியல் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. இதே முறைமையை மேலை நாட்டவர்கள், ஐரோப்பியர்கள் இன்று தாமும் மணமகளுக்கு தாலி அணிவித்து ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற உயரிய தத்துவத்தை தமது வாழ்வியல் நிலைகளில் முன்நிறுத்த முயல்வது எமது உயரிய தத்துவங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு நற்சான்றாக கொள்ளப்படலாம். நான் சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் போன்ற இடங்களில் வெள்ளைக்கார இந்துக்களுடன் பழகியுள்ளேன். அவர்கள் தாலிக்குக் கொடுக்கும் மதிப்பும் மாண்பும் மெய் சிலிர்க்க வைக்கும். ஒரு சுவிற்சர்லாந்து பெண் காலையில் பூஜை செய்ய முன் தன் தாலியைக் கண்களில் ஒற்றிக் கொண்டதைக் கண்டுள்ளேன். ஏன் என்று கேட்ட போது “உங்களுக்குத் தெரியாதா? கணவன் நல்லாயிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்றார்.

தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ முறைகள் கூட இன்று உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய செல்வாக்கைப் பெற்று விளங்குவது சிறப்பிற்குரியது. எதுவித பக்க விளைவுகளும் இன்றி மிகக் குறைந்த செலவில் மேற்கொள்ளக்கூடிய எமது மூலிகை மருத்துவ முறைமைகள் மேற்கு நாட்டு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதேச வைத்தியத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியா போன்ற நாடுகளுக்கு படையெடுக்கின்றார்கள். நாமோ எம்மைச் சுற்றி இருக்கின்ற மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகைகள் பற்றி எதுவுமே அறியாது வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்ற இரசாயனக் குளிகைகளையும்  மருந்து வகைகளையும் உட்கொண்டு வருகின்றோம். நான் கூட அதைத் தான் செய்கின்றேன். காரணம் விரைவில் குணமடைய வேண்டும் என்ற வேகமும் ஆர்வமும். பக்க விளைவுகள் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. 

அக்காலத்தில் எமது முன்னோர்களின் வாழ்வியல் முறைமைகள் மிக எளிமையாக்கப்பட்டிருந்ததால் தனி ஒருவரின் உழைப்பின் கீழ் அவரின் முழுக் குடும்பமே வாழக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் இன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் உழைத்தும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாமல் காணப்படுகின்றது. அன்று தனி மனித உழைப்பில் குடும்பமும் நன்றாக நடந்தது. தேவையான ஓய்வு நேரமும் அனைவருக்குங் கிட்டியது. இன்று அனைவரும் வேலைக்குச் செல்வதால் ஓய்வு நேரமும் கிட்டவில்லை. குடும்ப அமைப்பும் சீராக இல்லை. இவை அனைத்தையும் நாம் கருத்தில் கொண்டு எமது பாரம்பரிய கலாசார வாழ்வியல் முறைமைகளை அறிந்து கொள்ள முற்பட வேண்டும். நாம் எவ்வாறு சிறப்புடன் வாழ்ந்து வந்தோம் என்பதை உணர்ந்து கொள்ள, அறிந்து கொள்ள முன்வர வேண்டும். அதற்கான ஒரு ஆரம்ப நிகழ்வாகவே இந்த மரபுரிமைகள் நிலையத் திறப்பு விழா நடைபெறுகிறது. பாரம்பரியங்களை நாம் அறிவதால், அவற்றின் அடிப்படை தொழிற் திறன் பற்றி அறிவதால், எமது வாழ்க்கையில் ஒரு மாண்பு உண்டாகின்றது. ஒரு மதிப்பு ஏற்படுகின்றது. எமது எதிர்கால சந்ததிக்கு எமது நல்ல பாரம்பரியத்தைக் கையளிக்க இப்போதிருந்தே தயாராகிக் கொள்வோம் எனத் தெரிவித்து இந்த நல்ல முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவரிற்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

No comments