கொச்சைப்படுத்த வேண்டாம்: சத்தியலிங்கத்திற்கு எச்சரிக்கை!


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில்   வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ள கருத்துக்கள் போராட்டகாரர்களிடமே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.முப்பது வருடகால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்று காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் பொது நிகழ்வில் உரையாற்றிய அவர் முப்பது வருடகால யுத்தத்தில் எங்களுடைய சமுதாயத்தில் சமுதாயத்திற்கு ஒவ்வாத பல விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறது.

ஆனால் அந்த சமுதாயத்திற்கு ஒவ்வாத விடயங்களை செய்தவர்களே அந்த விடயங்களுக்கு எதிர்ப்பாக இப்போது போராட்டங்களை செய்கிறார்கள், அதை பற்றி பேசுகின்றனர்.

காணாமல் போனவர்களை எடுத்துக் கொண்டால் இந்த முப்பது வருட கால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்றைக்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காணாமல் போனவர்கள் ஏன் காணாமல் போனார்கள் எவ்வாறு காணாமல் போனோர் போன்ற பலரின் விடயங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு தெரியும்.

ஏனெனில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் காணாமல் போக செய்தவர்கள் என தெரிவித்துள்ளார்.

அவரது இக்கருத்து போராட்டத்திலீடுபட்டுள்ள மக்களை சீற்றமடையவைத்துள்ளது.போராட்டத்திற்கு ஆதரவளிக்காவிடினும் அதனை கொச்சைப்படுத்த வேண்டாமென அவர்கள் கோரியுள்ளனர்.

வடக்கின் வவுனியா,கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வருடங்கள் தாண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களின் போராட்டம் தொடர்வது குறிப்பிடத்தக்கது. 


No comments