மகிந்த பூச்சாண்டி:மீண்டும் கூட்டமைப்பின் நாடகம்!



மகிந்தவினை முன்னிறுத்தி ரணில் அரசினை காப்பாற்ற கூட்டமைப்பு திரைமறைவு வேலைகளை மும்முரமாக ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் வழமை போலவே கூட்டமைப்பிற்கு முண்டு கொடுக்க மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார் மகிந்த தரப்பின் முன்னாள் சகாவும் வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவருமான சி.தவராசா.

கடந்த ஆண்டைய வரவு செலவு திட்டத்தின் போதும் மகிந்தவை முன்னிறுத்தி நிபந்தனைகள் ஏதுமின்றி கூட்டமைப்பு ரணில் அரசை காப்பாற்றியிருந்தது.அதற்கு பிரதிபலனாக சொகுசு வாகன பெமிட் வழங்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக தற்போது அரசியல் கைதிகள் விவகாரத்தில் கூட்டமைப்பு சிக்கிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடுவிக்க சி.தவராசா களமிறங்கியுள்ளார்.

இலங்கை சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்காதுவிடின் அடுத்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.இது மகிந்த தரப்பிற்கு தீனிபோடுவதாகவே அமையும்.

அதாவது அடுத்த வரவு செலவுத் திட்டத்தினை தோற்கடிக்க வேண்டும் என பொது எதிரணி ஒரு பக்கம் மூச்சாக செயல்படும் நேரம் நாமும் அதற்கு தூபமாக செயல்படக்கூடாது.

இதேநேரம் அவர்களின் விடுதலை கிடைக்கவில்லை. ஆனால் விடுதலைகோரி குரல்கொடுக்கும் வாய்ப்பாவது கிட்டியுள்ளது. நிம்மதியான வாழ்வு இல்லாது விடினும் அநுராதபுரம் வரையில் பாதயாத்திரை சென்று எமது அவலத்தை எடுத்துக்கூற ஒரு நிலமை உள்ளது. வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் மகிந்த யுகம் வருமாயின் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இருந்து அநுராதபுரம் வரையில் ஊரவலம்போகும் எம்மால் பல்கலைக் கழக வாசலை தாண்ட முடியாத சூழ்நிலையே ஏற்படும்.

எனவே எதிர்ப்புக்களை பலமாக்கி அழுத்தத்தை அதிகரித்து விடுதலையை பெறவேண்டும். அது மகிந்தவிற்கான வாய்ப்பாகவும் அமையாது பார்க்க வேண்டியதும் தலையாய கடமையாக உள்ளது. அதேநேரம் தமிழர் தரப்பு தொடர்ந்தும் தொடர்ந்தும் காட்டும் மென்போக்கை அரசு அசட்டை செய்தால் அதன் விளைவுகளிற்கும் அரசே பதிலளிக்க வேண்டுமெனவும் சி.தவராசா தமிழரசு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.

No comments