ஆனோல்ட்டும் தொடங்கினார் அதிகாரிகளை பந்தாட?


ஒருவாறாக ஈபிடிபி மற்றும் பெரும்பான்மையின கட்சிகளுடன் இணைந்து ஆட்சி பீடமேறியுள்ள கூட்டமைப்பின் உள்ளுராட்சி தலைவர்கள் சத்தம் சந்தடியின்றி தமது கடைகளை விரிக்க தொடங்கியுள்ளனர்.ஏற்கனவே கனடா புலம்பெயர் தமிழர் ஒருவரிடமிருந்த பெற்ற பணத்திற்காக காரைநகரில் மதுபானச்சாலை அமைக்க கூட்டமைப்பு சார்பு தவிசாளர்,பிரதி தவிசாளர் அனுமதி வழங்கிய விவகாரம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில் மறுபுறம் யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் தனது சகோதரனிற்காக அதிகாரியொருவரை பந்தாடியமை அம்பலத்திற்கு வந்துள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட்டின் சகோதரர் தனியார் கட்டட ஒப்பந்த நிறுவனமொன்றை நடத்திவருகின்றார்.குறித்த நிறுவனம் மூலம் குருநகரில் முறையற்ற கட்டடமொன்றை அவர் நிர்மாணித்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்.மாநகரசபையின் கட்டட நிர்மாண வேலைகளை மேற்பார்வை செய்கின்ற அதிகாரியொருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.அத்துடன் குறித்த முறையற்ற கட்டட வேலைக்கான அனுமதியை வழங்க அவர் மறுதலித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த அதிகாரியை தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ள யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் முறையற்ற கட்டடத்திற்கு அனுமதி வழங்குமாறு நிர்ப்;பந்தித்துள்ளார்.எனினும் அதனை அமுல்படுத்த குறித்த அதிகாரி மறுதலித்திருந்த நிலையில் கோபமுற்ற யாழ்.மாநகர முதல்வர் ஆனோல்ட் உடனடியாக இடமாற்றத்தின் கீழ் குறித்த நேர்மையான அதிகாரியை யாழ்.மாநகரசபையிலிருந்து விரட்டியடித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வேறு ஒரு உள்ளுராட்சி சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள குறித்த நேர்மையான அதிகாரி மனஉளைச்சலுடன் நேரகாலத்துடன் ஓய்வுபெற முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்.மாநகரசபையில் வலுவான எதிர்கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்படுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகள் பந்தாடப்படுவதை கூட கண்டுகொள்ளமுடியாததாக முன்னணி இருக்கின்றதென கேள்வி மறுபுறம் எழுந்துள்ளது.  

No comments