இந்திய இராணுவத்தின் யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை!


ஈழத்தில் இந்திய இராணுவத்தின் படுகொலைகளுள் ஒன்றான யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலையின் 31வது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் 1987ம் ஆண்டு புகுந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வைத்தியர்கள் , தாதியர்கள் , உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரின் நினைவு தினம் வைத்தியசாலையில் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது.

இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய கொடிய படுகொலைகளில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளர்கள், என 68க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை சம்பவம் முக்கியமானதாகும்.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , பிரதம தாதி உத்தியோகத்தர் திருமதி பா.வடிவேல், உட்பட தாதிகள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் என 68பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றனர்.

தாம் வைத்தியர்கள் என்றும் தங்களை சுடவேண்டாம் என வைத்தியநிபுணர் சிவபாதசுந்தரம் இந்திய இராணுவத்திற்கு தலைமை தாங்கி வந்த இராணுவ அதிகாரியை மன்றாடிய போதும் ஈவிரக்கமற்ற இந்திய இராணுவத்தினர் வைத்தியநிபுணர், வைத்தியர்கள் என அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.

இங்கு வைத்தியசாலையினர் படுகொலை செய்யப்பட்டவர்களது உறவினர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஒரு ராஜீவ் காந்தியின் உயிரைப்பற்றி பெரிதாக பேசும் இந்தியர்கள் பெறுமதி மிக்க வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் , கல்விமான்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி பேசுவதில்லை.

இந்த படுகொலைகளுக்கு அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியே உத்தரவிட்டிருந்தார்.

No comments