கூட்டமைப்பினை ராஜினாமா செய்ய அழைக்கும் சுரேஸ்!


கடந்த நான்கு வருடங்களாக இந்த அரசுடன் இணங்கி செயற்பட்டமையால் தமிழ் மக்களிற்கு என்ன பலன்கள் கிடைத்தது என்பதை கூட்டமைப்பு வெளிப்படுத்த வேண்டுமென ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் க.சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூட்டமைப்பிற்கு இந்த சவாலை விடுத்ததுடன் அதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய அளவிலான  காணிகளை விடுவிக்க மட்டுமே முடிந்தது.இன்னும் வடக்கில் மட்டும் 60ஆயிரம் ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு இராணுவ வசமிருக்கின்றது.மறுபுறம் அரசியல் கைதிகள் பல தடவைகள் தமது விடுதலைக்காக உயிரை பணயம் வைத்து போராடி களைத்துவிட்டார்கள்.

ஆனால் இப்பொழுதும் கூட்டமைப்பு தற்போதைய அரசிற்கு தமிழ் மக்களை ஏமாற்றி எவ்வாறு ஆதரவை  வழங்குவதென்பது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.அதிலும்  தீர்வுத்திட்டம் பற்றி இந்த அரசுடனேயே பேசவேண்டியிருப்பதால் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்கவேண்டுமென புதிய வியாக்கியானத்தை செய்துகொண்டிருக்கின்றது.

அரசியல் கைதிகள் விடுதலை,காணி விடுவிப்பு, நில ஆக்கிரமிப்பு போன்ற விடயங்களில் இந்த அரசு தமிழ் மக்களிற்கு எந்த முடிவையும் தராத நிலையில் கூட்டமைப்போ தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுத்தரப்போவதாக சொல்லிக்கொண்டிருப்பது வேடிக்கையானது. நாடாளுமன்ற ஆட்சிக்காலம் நிறைவடைந்த பின் பதவியை துறந்து எந்த பயனும் இல்லை. ஆகவே தமிழ் மக்களிற்கு தீர்வெதனையும் தராத அரசிற்கு முண்டு கொடுத்துக்கொண்டிருப்பதனை விடுத்து பதவியை இன்றே துறவுங்கள் எனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments