வருகின்றது தமிழர் நாகரிக மையம்!


தமிழ் மக்களின் முன்னைய காலத்து வாழ்க்கை முறை, வசிப்பிடம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், மாங்குளத்தில் சுமார் 48 ஏக்கர் காணியில், “தமிழர் நாகரிக மையம்” கருத்திட்டம் உருவாக்கவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கருத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு, எதிர்வரும் வியாழக்கிழமை (18) நடைபெறவுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணக் கல்வி அமைச்சில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்துத் தொடர்ந்து கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்வியலில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் மற்றும் கலாசாரங்கள் என்பன அருகி வருவதாகவும் தமிழர்களின் புராதன அடையாளங்களை, போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்கள் அழித்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இவர்களுக்கு இணையாக, இலங்கை அரசாங்கமும், தமிழர்களின் புராதன அடையாளங்களை அன்று தொட்டு இன்று வரை அழித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், எனவே, தமது எதிர்காலச் சந்ததியினருக்கு, இவற்றை எடுத்துக் கூறும் வகையில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்களை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ளதாகக் கூறினார்.

அந்தவகையில், யாழ்ப்பாணம் - நல்லூர்க் கோவிலுக்கு அண்மையிலுள்ள சாதனா பாடசாலையின் ஒரு பகுதியை ஒதுக்கி “மரபுரிமை மையம்” கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அங்கு பண்டையகால உபகரணங்களைக் காட்சிப்படுத்த உள்ளதாகவும் இந்த நிகழ்வை, எதிர்வரும் வியாழக்கிழமை (18) காலை 9 மணிக்கு, குறித்த பாடசாலையில் நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் முன்னைய காலத்து வாழ்க்கை முறை, வசிப்பிடம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், மாங்குளத்தில் சுமார் 48 ஏக்கர் காணியில், “தமிழர் நாகரிக மையம்” கருத்திட்டத்தை உருவாக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும், வியாழக்கிழமை (18) மாலை, மாங்குளத்தில் இடம்பெறவுள்ளதாக, அவர் மேலும் கூறினார்

No comments