அல்லைப்பிட்டி அகழ்வில் சீன மட்பாட்டங்கள் மீட்பாம் ?


யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில், தாம் மேற்கொண்ட தொல்பொருள் அகழ்வாய்வில், 600 பழங்கால சீன மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்ரெம்பர் 29ஆம் நாள் இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதாக, சீனாவில் இருந்து வெளியாகும் ‘சைனா டெய்லி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது சீனாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் இடையில் பண்டைய கடல்சார் பட்டுப் பாதை வழியாக இருந்த இணைப்புகளைக் காட்டுவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் அதிகாரிகள், தமது முதலாவது வெளிநாட்டு அகழ்வாய்வு நடவடிக்கைகளை,  கடந்த ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவில் மேற்கொண்டிருந்தனர்.

துறைமுக நகரான யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 40 நாட்கள் விரிவான அகழ்வாய்வில், ஈடுபட்டனர்.

இதன்போது, அல்லைப்பிட்டி மற்றும் ஊர்காவற்றுறை கோட்டை சிதைவுப் பகுதிகளில், அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக, ஷங்காய் அருங்காட்சியக அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய  சென் ஜீ தெரிவித்தார்.

சென்னும் அவரது நண்பர்களும், அல்லைப்பிட்டிப் பகுதியில் 92.4 சதுர மீற்றர் பரப்பளவிலான இடத்தில் அகழ்வாய்வை மேற்கொண்ட போது, 650 வரையான மட்பாண்டத் துண்டுகளைக் கண்டெடுத்தனர். அவற்றில் 600 இற்கு மேற்பட்டவை சீனாவில் தயாரிக்கப்பட்டவை என்று சென் கூறினார்.

No comments