சிறிலங்காவிற்கு வரும் அமெரிக்க உயர் அதிகாரி பொறுப்புக்கூறலை வலியுறுத்துவார்


அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதி உதவிச் செயலர், அலிஸ் வெல்ஸ் அம்மையார், நாளை மாலைதீவு மற்றும் சிறிலங்காவுக்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார்.

எதிர்வரும் 9ஆம் நாள் தொடக்கம், 11ஆம் நாள் வரை அலிஸ் வெல்ஸ் அம்மையார் மாலைதீவு, சிறிலங்கா ஆகிய நாடுகளில் பயணத்தை மேற்கொள்வார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா மற்றும் மாலைதீவுடனான, தமது கூட்டு தொடர்பான அமெரிக்காவின் வலுவான அர்ப்பணிப்பை வலியுறுத்துவார் என்றும், திறந்த செழிப்பான இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் தமது நலன்களைப் பகிர்ந்து கொள்வார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் தங்கியிருக்கும் போது, அலிஸ் வெல்ஸ் அம்மையார், சிறிலங்கா அதிகாரிகளைச் சந்தித்து, இந்தோ- பசுபிக் இலக்குகளை அடைவதற்கு, இந்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக வளர்ந்து வரும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புடன், அமெரிக்க- சிறிலங்கா உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார்.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு, மனித உரிமைகள், நல்லிணக்கம், நிலைமாறு கால நீதி, பொறுப்புக்கூறல் போன்றவற்றில் தொடர்ந்து முன்னேற்றங்கள் எட்டப்பட வேண்டியதையும் அலிஸ் வெல்ஸ் சிறிலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளார்.

No comments