வனவளத்துறை அடாவடி:திண்டாடும் எல்லைக்கிராமங்கள்!


வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மீள்குடியமர்ந்த மக்கள் அங்குள்ள காணிகளில் எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என்று வனவளத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் இந்த உத்தரவால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

வவுனியா வடக்கில் உள்ள பழம்பெரும் கிராமம் காஞ்சிரமோட்டை. அந்தக் கிராமத்தில் போருக்கு முன்னர் அதிகளவான மக்கள் வாழ்ந்தனர். போரால் இடம்பெயர்ந்த அவர்கள் உள்நாட்டில் பல இடங்களுக்கும், அயல் நாடான இந்தியாவுக்கும் சென்றிருந்தனர்.

போர் முடிந்த பின்னர் மீளத் திரும்பிய மக்கள் தமது பூர்வீகக் கிராமத்தில் குடியமர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பிரதேச செயலர் மக்கள் மீள்குடியமர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருந்தார். மக்களில் பலர் தற்காலிக வீடுகள் அமைத்துத் தங்கித் தமது காணிகளை துப்புரவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். சிலர் நிரந்தர வீடுகள் அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். திடீரென வனவளத் திணைக்களத்தினர் அந்தக் காணிகள் வனவளத்திணைக்களத்துக்கு உரியவை. அவற்றில் எந்த அபிவிருத்திப் பணிகளும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
நேற்றுமுன்தினம் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களுக்கும், வனவளத் திணைக்களத்தினருக்கும் இடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்தன. மனச்சாட்சியுடன், மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து வனவளத் திணைக்களத்தினர் நடந்துகொள்ள வேண்டும் என்று இணைத்தலைவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

கிராமத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்துள்ளதால் அவர்கள் தாம் வாழ்வதற்கான அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ள அனுமதிப்பது என்றும, சட்டரீதியான செயற்பாடுகளைப் பின்னர் மேற்கொள்ளலாம் என்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. வனவளத் துறை அதிகாரிகளும் அதற்குச் சம்மதித்தனர்.

ஆனால், நேற்று காஞ்சிரமோட்டைக் கிராமத்துக்குச் சென்ற வனவளத்துறை அதிகாரிகள் காணித் துப்புரவு நடவடிக்கைகளோ அல்லது வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளோ மேற்கொள்ளக் கூடாது என்று மக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். அரச தலைவரிடம் இருந்து சட்டரீதியான அனுமதி கிடைக்கும்வரை எதுவும் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா வடக்குப் பிரதேச செயலர் தகவல் வெளியிடுகையில் நேற்றுமுன்தினம் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட பின்னரும் நேற்று வனவளத் திணைக்களம் தடை விதித்துள்ளது. மக்களின் பிரச்சினைகளை நாம் விளங்கிக் கொள்கின்றோம். எனினும் இந்தப் பிரச்சினையைச் சட்டரீதியாகவே அணுக வேண்டும். நாளை இது தொடர்பாக அரச தலைவருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவாக அனுமதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போமென தெரிவித்துள்ளார்.

No comments