சித்திரவதைக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க சிறிலங்கா மறுப்பதாக குற்றச்சாட்டு


சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியது குறித்து, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைவர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நீதிப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு கோரும், அறிக்கை ஒன்றை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு சமர்ப்பித்திருந்தது.

அந்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ள நிலையிலேயே, இதுகுறித்து சிறிலங்கா  அரசாங்கத்துக்கு சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு  கடிதம் எழுதியுள்ளது.

குழுவின் அவதானிப்புகள் வெளியிடப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும், தமது குழு கோரிய தகவல்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என்று, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு, ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதுவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளது.

2016 ஆம் ஆண்டு நடந்த சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 59ஆவது அமர்வில்,  இந்த விடயம் கலந்துரையாடப்பட்டு, அறிக்கைக்குப் பதிலளிக்க 2017 டிசெம்பர் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

எனினும், அந்தக் கால எல்லை கடந்து பல மாதங்களாகியும் சிறிலங்கா இன்னமும் இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கவில்லை.

2008ஆம் ஆண்டு மார்ச் தொடக்கம், 2009 ஜூன் வரை குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவராக சிசிர மென்டிஸ் பதவி வகித்த போது, அவரது வகிபாகம் என்ன என்பது பற்றிய தகவல்களை சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கோரியிருந்தது.

2016ஆம் ஆண்டு நடந்த ஜெனிவா அமர்வில், பங்கேற்ற சிறிலங்கா குழுவில் சிசிர மென்டிஸ் உள்ளடக்கப்பட்டிருந்ததை அடுத்து இந்த விவகாரம் பூதாகாரமாக உருவெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments