7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு - பழ.நெடுமாறன்

7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் கூறியுள்ளார்.

அவர் இன்றைய உச்சநீதிமன்றத் தீர்பையடுத்து அவர் வித்துள்ள அறிக்கையில்:-

ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பினை வரவேற்று மனமாற நன்றி செலுத்துகிறேன்.

நால்வருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அப்போதைய ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்தபோது, அவர் அதை ஏற்கவில்லை. உடனடியாக நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம். 25-11-1999 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் கருணை மனுக்களை ஏற்க, மறுக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், அமைச்சரவை செய்யும் பரிந்துரைகளை ஏற்று ஆளுநர் செயல்படவேண்டும் என்ற தீர்ப்பினை வழங்கியுள்ளது.  அரசியல் சட்டம் 1950ஆம்  ஆண்டு நடைமுறைக்கு வந்தப் பிறகு முதன்முறையாக சிறைவாசிகளின் தண்டனையை குறைக்கவோ, விடுதலை செய்யவோ முடிவு எடுக்கும் அதிகாரம் அமைச்சரவைகளுக்கு மட்டுமே உண்டு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நாங்கள் பெற்றிருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி இந்த 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பவேண்டும். அதை ஆளுநர் ஏற்பதை தவிர வேறு வழியில்லை.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆண்டு நிறைவுற்று முடியவிருக்கும் இக்காலகட்டத்தில் முதல்வர் 7 பேரையும் விடுவித்து தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அன்புள்ள
பழ.நெடுமாறன்

#Perarivalan #Murugan #Santham #Jayakumar #Robert Payas #Ravichandaran #Nalini #Pazha Nedumaran

No comments