7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - வேல்முருகன்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கிணங்க, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவருகிறார்கள்.

இதில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன்  தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையில், 7 பேரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என தமிழ்நாடு அரசும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது; கருணை அடிப்படையில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கும் குடியரசுத் தலைவருக்கும் தமிழக அரசு கடிதமும் எழுதியது.

ஆனால் அந்தக் கடிதத்தை ஒன்றிய அரசும் நிராகரித்தது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தும் நிராகரித்தார்.

குடியரசுத் தலைவரின் இந்த நிராகரிப்பை எதிர்த்து பேரறிவாளன் உட்பட 7 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதே சமயம். இந்த 7 பேரின் மனுவை எதிர்த்தும், அவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்தும் ஒன்றிய அரசுமே வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று, ”ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தமிழ்நாடு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று தீர்ப்பளித்துள்ளது; 7 பேரையும் விடுதலை செய்ய, ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யலாம் என்றும், அரிசின் அந்தப் பரிந்துரையின் பேரில் ஆளுநர் இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்து, ஒன்றிய அரசு தொடுத்த வழக்கை முடித்துவைத்துள்ளது.

எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கிணங்க, 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 தமிழர்களையும் அரசமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

#Perarivalan #Murugan #Santham #Jayakumar #Robert Payas #Ravichandaran #Nalini

No comments