காணாமல் போனோர் விவகாரம்:இறுகுகின்றது முற்றுகை!

இலங்கை இராணுவத்தலைமையக பிரதானியும் அமைச்சர் சரத்பொன்சேகாவின் சகபாடியுமான மேஜர் ஜெனரல் துமிந்த ஹெப்பிற்றிவெலான மற்றும் அவரது சகபாடிகள் மீதான முற்றுகை இறுகத்தொடங்கியுள்ளது.முப்படைகளை சேர்ந்தோரை காட்டிக்கொடுக்கவேண்டாமென்ற இலங்கை ஜனாதிபதியின் உத்தரவு ஒருபுறம் நெருக்கடிகளை தோற்றுவிக்க மறுபுறம் யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில், கடந்த 1996ஆம் ஆண்டு இளைஞன் ஒருவர் இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மேலுமொரு சாட்சியாளர் மன்றில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 1996ஆம் ஆண்டு அரியாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் இராணுவத்தால் காணமல் ஆக்கப்பட்ட சம்பவம் மீதான வழக்கு விசாரணை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன் முன்னிலையில், நேற்று  (12) எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது, இந்த வழக்கில் ஏற்கெனவே இளைஞனின் தாயார் சாட்சியமளித்திருந்த நிலையில், நேற்று தினம் மற்றுமொரு கண்கண்டச் சாட்சியத்தின் சாட்சியும் பதிவுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில், இந்த வழக்கில் எதிர்த்தரப்புச் சார்பாக சட்டமா அதிபர் திணைக்கள அரச சட்டவாதியே வழக்கை நடத்துவதாகவும் எனவே, அவர் இன்றைய தினம் (புதன்கிழமை) மன்றுக்குச் சமூகளிக்காததால், வழக்கை தவணையிடுமாறும், இராணுவச் சட்டத்தரணி மன்றை கோரினார்.

இதற்கு தமது ஆட்சேபனையை தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணி ரஞ்சித்குமார், குறித்த வழக்கில் முறைப்பாட்டாளரும் தற்போது சாட்சியமளிக்கவுள்ளவரும் மிகவும் வயது முதிர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடாத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதவான் கூறுகையில்,

குறித்த வழக்கில் முறைப்பாட்டாளர் வயது முதிர்ந்தவராக இருக்கும் நிலையில் விரைவாக நடாத்தி முடித்து அவருக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை மிக நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், இனிமேலும் காலத்தை நீடிக்க முடியாது.

அவரது வயது கருதி, வழக்கு விசாரணையை விரைவாக முடித்து நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.

இதன்படி தொடர்ந்து இடம்பெற்ற சாட்சி பதிவில், குறித்த சாட்சி, சம்பவ தினம் மாலை 5.45 மணியளவில் குறித்த இளைஞன் கொழும்புத்துறை - இலந்தைகுளம் வீதியில் உள்ள புளியடிச் சந்தி இராணுவ முகாமுக்குள் சென்றதை தாம் கண்டதாகச் சாட்சியமளித்திருந்தார்.

இதன் பின்னர் மறுநாள் காலையிலேயே, அந்த இளைஞன் காணமல்போன விடயம் தெரியவந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவரது சாட்சிப் பதிவைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை எதிர்வரும் 25ஆம் திகதி வரை ஒத்திவைத்து, நீதவான் சி.சதீஸ்கரன்  உத்தரவிட்டார்.

No comments