வாள் வெட்டு இடையிடையே தான் நிகழ்கின்றதாம்?


வடக்கு மாகாணத்தில், சில பிரதேசங்களில் மாத்திரம்தான் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவென வடக்கு மாகாண குற்றத் தடுப்புப் பிரிவு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பி.கணேசநாதன் தெரிவித்துள்ளார்.அதனால் வடமாகாணம் முழுவதும் வாள்வெட்டு வன்முறைகள் இடம்பெறுவதாகக் கூற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாள்வெட்டுச் சம்பவங்கள், களவு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக, கிராமங்கள் தோறும் விழிப்புக் குழுக்களை அமைத்துச் செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், அந்த விழிப்புக் குழுக்கள், இரவு நேரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், இதன் பின்னர் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ளனவெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடுபவர்கள் தொடர்பில், காவல்துறைக்கு அறிவிக்க அவர் கோரியுள்ளார்.இதன் மூலம், சட்டவிரோதச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆவா குழுக்களை இரண்டு நாட்களில் கட்டுப்படுத்த தம்மால் முடியுமென யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியராட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments